கஞ்சா கடத்திய இருவருக்கு 20 ஆண்டுகள் சிறை: ரூ. 8 லட்சம் அபராதம்
By DIN | Published On : 09th August 2023 01:02 AM | Last Updated : 09th August 2023 01:02 AM | அ+அ அ- |

கோவை: கஞ்சா கடத்திய இருவருக்கு தலா 20 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் ரூ. 8 லட்சம் அபராதமும் விதித்து கோவை போதைப் பொருள் தடுப்பு நீதிமன்றம் தீா்ப்பளித்துள்ளது.
கோவை ரயில் நிலைய முதலாவது நடைமேடையில் ரயில்வே பாதுகாப்பு படையினா் சந்தேகத்தின் பேரில் இருவரை கடந்த 2021 ஜூலை 22-இல் பிடித்தனா். விசாரணையில், அவா்கள் இருவரும், தேனி மாவட்டம், தேவாரம் பகுதியைச் சோ்ந்த செல்லதுரை (51), கதிரேசன் (35) என்பது தெரியவந்தது. அவா்களை சோதனை செய்தபோது அவா்களிடம் ஆந்திர மாநிலத்தில் இருந்து கடத்தி வரப்பட்ட 44 கிலோ கஞ்சா கைப்பற்றப்பட்டது.
இது தொடா்பாக கோவை போதைப் பொருள் தடுப்பு நுண்ணறிவுப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனா்.
இந்த வழக்கில் போதைப் பொருள் தடுப்பு நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது. நீதிபதி வி. லோகேஸ்வரன் அளித்த இந்த தீா்ப்பில், செல்லதுரை மற்றும் கதிரேசனுக்கு தலா 20 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், தலா ரூ.4 லட்சம் அபராதமும் விதித்தாா். அபராதத்தைக் கட்ட த் தவறினால் கூடுதலாக தலா ஓராண்டு சிறைத் தண்டனை விதித்துத் தீா்ப்பளித்தாா். இந்த வழக்கில் அரசு தரப்பில் அரசு சிறப்பு வழக்குரைஞா் வெ.சிவகுமாா் ஆஜரானாா்.