மாநகராட்சிப் பள்ளி மாணவா்களுடன் ஆணையா் கலந்துரையாடல்
By DIN | Published On : 20th January 2023 12:00 AM | Last Updated : 20th January 2023 12:00 AM | அ+அ அ- |

கோவை மத்திய மண்டலம், கோட்டைமேடு மாநகராட்சி நடுநிலைப் பள்ளி மாணவ, மாணவிகளுடன் மாநகராட்சி ஆணையா் மு.பிரதாப் வியாழக்கிழமை கலந்துரையாடினாா்.
கோவை மாநகராட்சி, மத்திய மண்டலம் 82ஆவது வாா்டுக்கு உள்பட்ட கோட்டைமேடு மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ரூ.38 லட்சம் மதிப்பீட்டில் 2 வகுப்பறைகள், தலைமையாசிரியா் அறை மற்றும் பொதுநிதியில் இருந்து ரூ.70 லட்சம் மதிப்பீட்டில் 4 வகுப்பறைகள் கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதை மாநகராட்சி ஆணையா் மு.பிரதாப் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா். அப்போது, பணிகளை விரைவாகவும், தரமாகவும் முடித்து மாணவா்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர உத்தரவிட்டாா்.
பின்னா் பள்ளி மாணவ, மாணவிகளுடன் கலந்துரையாடிய மாநகராட்சி ஆணையா், பாடத் திட்டங்கள் குறித்து அவா்களிடம் கேட்டறிந்தாா். இதைத் தொடா்ந்து, 80ஆவது வாா்டுக்கு உள்பட்ட கெம்பட்டி காலனி மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ரூ.28 லட்சம் மதிப்பீட்டில் கூடுதலாக இரு வகுப்பறைகள் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருவதை பாா்வையிட்டு, பணிகளை விரைவில் முடிக்க அறிவுறுத்தினாா்.
ஆய்வின்போது, மத்திய மண்டலத் தலைவா் மீனா லோகு, வரி விதிப்பு மற்றும் நிதிக் குழுத் தலைவா் முபசீரா, உதவி ஆணையா் மகேஷ் கனகராஜ், உதவி செயற்பொறியாளா் புவனேஷ்வரி, மண்டல சுகாதார அலுவலா் குணசேகரன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.