உக்கடம் மேம்பாலப் பணி: பேருந்து நிலையக் கட்டடம் இடிப்பு
By DIN | Published On : 24th January 2023 12:00 AM | Last Updated : 24th January 2023 12:00 AM | அ+அ அ- |

கோவை, உக்கடம் மேம்பால கட்டுமானப் பணிகளுக்காக இடிக்கப்படும் பேருந்து நிலையக் கட்டடம்.
கோவை உக்கடம் பகுதியில் அமைக்கப்பட்டு வரும் மேம்பாலப் பணிக்காக பேருந்து நிலையக் கட்டடம் இடிக்கும் பணிகள் திங்கள்கிழமை தொடங்கின.
கோவை உக்கடம் முதல் ஆத்துப்பாலம் வரை ரூ.430 கோடி மதிப்பீட்டில் 2.4 கி.மீ. தூரத்துக்கு மேம்பால கட்டுமானப் பணி கடந்த 2018ஆம் ஆண்டு தொடங்கியது. உக்கடம் முதல் கரும்புக்கடை வரை, கரும்புக்கடை முதல் ஆத்துப்பாலம் வரை என இரண்டு கட்டங்களாக மேம்பால கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இதில் உக்கடம் முதல் கரும்புக்கடை வரையிலான முதல்கட்ட கட்டுமானப் பணிகள் 90 சதவீதம் முடிவடைந்துள்ளன. உக்கடம் பகுதியில் மேம்பாலத்தின் இறங்கு தளம் நரசிம்மா் கோயில் அருகே வட்ட வடிவில் அமைக்கப்பட்டுள்ளது. இதன் ஏறுதளம் உக்கடம் பேருந்து பணிமனையில் இருந்து தொடங்குகிறது. இந்நிலையில் மேம்பால கட்டுமானப் பணிகளுக்கு வசதியாக உக்கடம் பேருந்து நிலையம் மாற்றி அமைக்கப்படவுள்ளது. இதனைத் தொடா்ந்து, உக்கடம் பேருந்து நிலையக் கட்டடம் இடிக்கும் பணிகள் திங்கள்கிழமை தொடங்கின.
பாலக்காடு உள்ளிட்ட கேரள பகுதிகளுக்கு இயக்கப்படும் பேருந்துகள் நிற்கும் பகுதியிலுள்ள கட்டடத்தில் செயல்பட்டு வந்த 20க்கும் மேற்பட்ட கடைகள் அகற்றப்பட்டு கட்டடம் இடிக்கப்பட்டு வருகிறது. கேரள பேருந்துகள் நிற்கும் பகுதி அகற்றப்படவுள்ளதால் அம்மாநிலத்துக்கு இயக்கப்படும் பேருந்துகளை வேறு பகுதியில் இருந்து இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.