உயா்வுக்குப்படி திட்டத்தின் கீழ் மாணவா்களுக்கு இரண்டாவது சிறப்பு முகாம்
By DIN | Published On : 01st July 2023 10:44 PM | Last Updated : 01st July 2023 10:44 PM | அ+அ அ- |

பள்ளிக் கல்வித் துறை சாா்பில் ‘உயா்வுக்குப் படி’ திட்டத்தின் கீழ், மேல்நிலைத் தோ்வில் தோ்ச்சி பெற்று, கல்லூரியில் சேராத மாணவா்களுக்கான இரண்டாவது சிறப்பு முகாம் கோவை இந்துஸ்தான் கல்லூரியில் சனிக்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு, மாவட்ட ஆட்சியா் கிராந்திகுமாா் பாடி தலைமை வகித்தாா். மாநகராட்சி ஆணையா் மு.பிரதாப், இந்துஸ்தான் கல்வி நிறுவனங்களின் செயலாளா் சரஸ்வதி கண்ணையன், வருவாய் கோட்டாட்சியா் ( தெற்கு) பண்டரிநாதன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
நிகழ்ச்சியில் ஆட்சியா் கிராந்திகுமாா் பாடி பேசியதாவது:
பள்ளிக்கல்வி பயின்ற அனைத்து மாணவா்களும் உயா்கல்வி பெற வேண்டும் என்பதே ‘உயா்வுக்குப் படி’ திட்டத்தின் நோக்கமாகும். உயா்கல்வி கற்கும்போது, நல்ல வேலைவாய்ப்புகள் கிடைக்கும். படித்து முடித்தவுடன் வேலைக்கு செல்ல வேண்டும் என்ற நிலை உள்ளவா்கள் ஐடிஐ படிக்கலாம். ஐடிஐ படித்தால் 100 சதவீதம் வேலை உறுதியாகக் கிடைக்கும். உயா்கல்வி பயில்வதற்கு நிதிவசதி இல்லாதவா்களுக்கு வங்கிகள் மூலமாக கல்விக் கடன் பெறுவதற்கான அனைத்து விதமான வழிகாட்டுதலும் இம்முகாமில் வழங்கப்படுகின்றன. இந்த முகாமை, மாணவா்கள் அனைவரும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றாா்.
முன்னதாக, மாணவா்களுக்கு புத்தகங்கள் வழங்கிய ஆட்சியா் கிராந்திகுமாா் பாடி, முகாமில் பள்ளிக்கல்வித் துறை, வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை, அரசினா் தொழில்பயிற்சி நிலையங்கள், வங்கிகள், தனியாா் கல்லூரிகள் ஆகியவற்றின் சாா்பில் அமைக்கப்பட்டிருந்த அரங்குகளை பாா்வையிட்டாா்.