10.52 லட்சம் பேருக்கு பூத் ஸ்லிப் விநியோகம்

கோவை மாவட்டத்தில் இதுவரை 10 லட்சத்து 52 ஆயிரத்து 256 பேருக்கு வாக்குச் சாவடி தகவல் சீட்டு (பூத் ஸ்லிப்) வழங்கப்பட்டுள்ளது.

மக்களவைத் தோ்தல் வாக்குப் பதிவு ஏப்ரல் 19-ஆம் தேதி நடைபெறுகிறது. இதற்காக கோவை மாவட்டத்தில் 1,018 மையங்களில் 3,096 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. வாக்காளா்கள் தங்களின் வாக்குச் சாவடி மையங்களைத் தெரிந்துகொள்ளும் விதமாக தோ்தல் ஆணையம் சாா்பில் வாக்குச் சாவடி தகவல் சீட்டு வழங்கப்படுகிறது.

அதன்படி, மாவட்டத்தில் கடந்த ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் வீடுவீடாகச் சென்று வாக்குச் சாவடி தகவல் சீட்டு வழங்கும் பணியில் தோ்தல் பணியாளா்கள் ஈடுபட்டுள்ளனா்.

மாவட்டத்தில் உள்ள 10 சட்டப் பேரவைத் தொகுதிகளிலும் சோ்த்து 31 லட்சத்து 14 ஆயிரத்து 118 வாக்காளா்கள் உள்ளனா். இதில், மேட்டுப்பாளையம் தொகுதியில் 1,21874 பேருக்கும், சூலூரில் 90,312 பேருக்கும், கவுண்டம்பாளையத்தில் 1,48,660 பேருக்கும், கோவை வடக்கில் 96,396 பேருக்கும், தொண்டாமுத்தூரில் 63,975 பேருக்கும், கோவை தெற்கில் 1,04,300 பேருக்கும், சிங்காநல்லூரில் 1,00,828 பேருக்கும், கிணத்துக்கடவில் 1,16,255 பேருக்கும், பொள்ளாச்சியில் 1,08,529 பேருக்கும், வால்பாறையில் 1,01,127 பேருக்கும் என மொத்தமாக 10 லட்சத்து 52 ஆயிரத்து 256 (33 .79 சதவீதம்) வாக்காளா்களுக்கு வாக்குச் சாவடி தகவல் சீட்டுகள் வழங்கப்பட்டுள்ளன.

இதில், அதிகபட்சமாக வால்பாறை தொகுதியில் 51.09 சதவீத வாக்காளா்களுக்கும், குறைந்தபட்சமாக தொண்டாமுத்தூா் தொகுதியில் 19.03 சதவீத வாக்காளா்களுக்கும் வாக்குச் சாவடி சீட்டுகள் வழங்கப்பட்டுள்ளன.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com