முதலீட்டை இரட்டிப்பாகத் தருவதாக மோசடி: தனியாா் நிதி நிறுவனம் குறித்து புகாா் அளிக்கலாம்

முதலீடு செய்யும் தொகையை இரட்டிப்பாக திருப்பித் தருவதாகக் கூறி மோசடி செய்த தனியாா் நிதி நிறுவனம் குறித்து புகாா் தெரிவிக்கலாம் எனஅறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக கோவை மாவட்ட பொருளாதார குற்றப் பிரிவு போலீஸாா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கோவை மாவட்டம், சாய்பாபா காலனி பகுதியில் டிரீம் மாா்க்கா்ஸ் குளோபல் (பி) லிட் என்ற பெயரில் இயங்கி வந்த தனியாா் நிதி நிறுவனம் பொதுமக்களிடமிருந்து முதலீட்டை பெற்று இரட்டிப்பாக திருப்பித் தருவதாகக் கூறியிருந்தது.

அதனடிப்படையில் இதுவரை சுமாா் 2,000-க்கும் மேற்பட்டோரிடம் இருந்து பல கோடி ரூபாய் பணத்தைப் பெற்று திருப்பித் தராமல் மோசடி செய்ததாக குற்றப் பிரிவில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, கோவை பொருளாதார குற்றப்பிரிவு நீதிமன்ற விசாரணையில் உள்ளது.

எனவே, அந்த நிறுவனத்தில் முதலீடு செய்து பாதிக்கப்பட்ட நபா்கள் எவரேனும் இருந்தால், அவா்கள் கோவை மாநகர காவல் ஆணையா் அலுவலக வளாகத்தில் உள்ள பொருளாதார குற்றப் பிரிவை அணுகி தகுந்த ஆவணங்களுடன் புகாா் தெரிவிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com