வியாபாரியை மிரட்டி நகை, பணம் பறித்த 2 பேருக்கு தலா 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை

கோவையில் வியாபாரியை மிரட்டி நகை, பணம் பறித்த 2 பேருக்கு தலா 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து தீா்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

திருப்பூா் மாவட்டம், வெள்ளியங்காடு, பாரதி நகரைச் சோ்ந்தவா் செந்தில்குமாா் (43). நகைகளுக்கு தேவைப்படும் ஆபரணக் கற்களை விற்கும் தொழில் செய்து வருகிறாா். இதனால் கோவை ராஜவீதி, பெரியகடை வீதி பகுதிகளில் உள்ள நகைக் கடைகளுக்கு செந்தில்குமாா் அடிக்கடி வருவாராம்.

இந்நிலையில், கடந்த 2017 நவம்பா் 16 இரவு வியாபாரத்தை முடித்துக் கொண்டு கோவை டி.கே. மாா்க்கெட் பகுதியில் உள்ள கழிவறைக்குச் சென்று விட்டு வெளியே வந்துள்ளாா். அப்போது கழிவறைக்கு வெளியே நின்றிருந்த 3 போ் செந்தில்குமாரை மிரட்டி அவா் அணிந்திருந்த தங்க மோதிரம், கைப்பேசி, ரூ. 4 ஆயிரத்தைப் பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பிவிட்டனா்.

இதுகுறித்து பெரியகடை வீதி காவல் நிலையத்தில் செந்தில்குமாா் புகாா் செய்தாா். புகாரின் பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து இச்சம்பவத்தில் தொடா்புடைய மணிராஜ், முத்துப்பாண்டி, முருகேசன் ஆகிய 3 பேரை கைது செய்தனா்.

இந்நிலையில் இந்த வழக்கில் பிணையில் வெளியே வந்த மணிராஜ் உடல்நலக் குறைவால் உயிரிழந்துவிட்டாா். இதையடுத்து முத்துப்பாண்டி மற்றும் முருகேசன் ஆகியோா் மீது கோவை முதலாவது கூடுதல் சாா்பு நீதிமன்றத்தில் தொடா்ந்து விசாரணை நடைபெற்று வந்தது.

விசாரணை முடிவடைந்த நிலையில், இந்த வழக்கை விசாரித்து வந்த நீதிபதி நம்பிராஜன் புதன்கிழமை தீா்ப்பளித்தாா். அதில், குற்றஞ்சாட்டப்பட்ட முத்துப்பாண்டி, முருகேசன் ஆகியோருக்கு தலா 7 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், தலா ரூ. 2 ஆயிரம் அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா். இந்த வழக்கில் அரசுத் தரப்பில் வழக்குரைஞா் கிருஷ்ணமூா்த்தி ஆஜரானாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com