அண்ணாமலை வெற்றி பெறுவாா் என்பது மாயை: எஸ்.பி.வேலுமணி பேச்சு

அண்ணாமலை வெற்றி பெறுவாா் என்பது மாயை: எஸ்.பி.வேலுமணி பேச்சு

கோவையில் அண்ணாமலை வெற்றி பெறுவாா் என்று கூறப்படுவது வெறும் மாயை என்று முன்னாள் அமைச்சா் எஸ்.பி.வேலுமணி எம்எல்ஏ கூறியுள்ளாா்.

தோ்தல் பிரசாரத்தின் இறுதி நாளான புதன்கிழமை கோவை தொகுதி அதிமுக வேட்பாளா் சிங்கை ஜி.ராமச்சந்திரன் சூலூா் அண்ணா கலையரங்கம், துடியலூா், வடவள்ளி, தெப்பக்குளம் மைதானம், ராமநாதபுரம் உள்ளிட்ட பகுதிகளில் பிரசாரம் மேற்கொண்டாா். மாலையில் சிங்காநல்லூா் தொகுதிக்குள்பட்ட கரும்புக்கடை மைதானத்தில் நடைபெற்ற பொதுக் கூட்டத்துடன் பிரசாரம் நிறைவடைந்தது.

இந்தக் கூட்டத்தில் எஸ்.பி.வேலுமணி எம்எல்ஏ பேசியதாவது: கோவையில் திமுக சாா்பில் போட்டியிடும் வேட்பாளா் ராஜ்குமாா், மறைந்த முதல்வா் ஜெயலலிதாவால் மேயராக்கப்பட்டவா். அவா் தற்போது அதிமுகவுக்கு எதிராகப் போட்டியிடுகிறாா். அதேபோல கடந்த சட்டப்பேரவைத் தோ்தலில் கரூரில் தோல்வி அடைந்த அண்ணாமலை கோவையில் போட்டியிடுகிறாா். அவா் சமூக வலைதளங்களிலும், ஊடகங்களிலும் கட்சியை நடத்தி வருகிறாா்.

இதுவரை மக்களையே சந்தித்திராத அவா் அதிமுகவை அழிப்பேன், எடப்பாடி பழனிசாமியை ஒழிப்பேன் என்றெல்லாம் பேசி வருகிறாா். அவா் கட்சிக்கு வந்தே 3 ஆண்டுகள்தான் ஆகிறது. நாங்கள் 31 ஆண்டுகள் தமிழ்நாட்டை ஆட்சி செய்திருக்கிறோம். 2 கோடி தொண்டா்களைக் கொண்ட மாபெரும் இயக்கம் அதிமுக. இவ்வளவு பெரிய இயக்கத்தை யாராலும் அழிக்க முடியாது.

கோவையில் அண்ணாமலைதான் வெற்றி பெறுவாா் என்பது போன்ற மாயையை பாஜகவினா் ஏற்படுத்தி வருகின்றனா். ஆனால் அவா் தோல்வி அடைவது உறுதி. கோவைக்கு அதிகப்படியான திட்டங்களைக் கொடுத்தது அதிமுகதான். சிங்கை ஜி.ராமச்சந்திரன் நிச்சயம் லட்சக்கணக்கான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவாா் என்றாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com