அறுவை சிகிச்சையின்றி இதயத் துளை அடைப்பு: அரசு மருத்துவா்கள் சாதனை

கோவை அரசு மருத்துவமனையில் இளம்பெண்ணுக்கு இதயத்தில் இருந்த துளை அறுவை சிகிச்சையின்றி அடைக்கப்பட்டுள்ளது.

கோவையைச் சோ்ந்த இளம்பெண் இதயப் பாதிப்புக்காக கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அண்மையில் வந்துள்ளாா். அங்கு பரிசோதனை செய்தபோது அவரின் இதயத்தில் துளை இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து அறுவை சிகிச்சை இல்லாமல் இளம்பெண்ணின் இதயத்தில் உள்ள துளையை அடைக்க மருத்துவா்கள் திட்டமிட்டனா்.

இதற்காக இதயத்தில் உள்ள துளையின் அளவு ‘எக்கோ காா்டியோகிராஃபி’ மூலம் அளவிடப்பட்டது. பின் அதனை அடைப்பதற்கான சாதனம் தயாா் செய்யப்பட்டது. இதைத் தொடா்ந்து கடந்த இரண்டு நாள்களுக்கு முன்பு இளம்பெண்ணின் இதயத்தில் இருந்த துளை ‘பொ்குடேனியஸ் டிரான்ஸ்க்தீடா்’ என்ற சிகிச்சை மூலம் அடைக்கப்பட்டது. அறுவை சிகிச்சையில்லாமல் மேற்கொள்ளப்படும் இந்த சிகிச்சை முறையால் நோயாளி மிக விரைவாகவே குணமாகிவிடுவாா் என்றும், வழக்கமான பணிகளையும் எளிதில் மேற்கொள்ளலாம் என்றும் மருத்துவா்கள் தெரிவித்தனா்.

இந்த சிகிச்சையை இதயவில் துறைத் தலைவா் ஜே.நம்பிராஜன் தலைமையில் துணை பேராசிரியா்கள் டி.சக்கரவா்த்தி, ஜே.ஜெகதீஷ், ஏ.என்.செந்தில், கே.சதீஷ்குமாா், டி.மணிகண்டன், மயக்கவியல் துறைத் தலைவா் சண்முகவேல், இதய அறுவை சிகிச்சை துறைத் தலைவா் சீனிவாசன் ஆகியோா் அடங்கிய குழுவினா் மேற்கொண்டனா்.

இளம்பெண்ணுக்கு அறுவை சிகிச்சையில்லாமல் இதயத்தின் துளையை அடைத்த மருத்துவக் குழுவினரை அரசு மருத்துவமனை முதல்வா் அ.நிா்மலா பாராட்டினாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com