கோவை தொகுதி அதிமுக வேட்பாளரை ஆதரித்து எம்.எஸ்.எம். ஆனந்தன் எம்எல்ஏ பிரசாரம்

கோவை மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளா் சிங்கை ராமச்சந்திரனை ஆதரித்து பல்லடம் சட்டப் பேரவை உறுப்பினா் எம்.எஸ்.எம்.ஆனந்தன் புதன்கிழமை பிரசாரம் மேற்கொண்டாா்.

அப்போது, எம்.எஸ்.எம். ஆனந்தன் பேசியதாவது: கொங்கு மண்டலம் எப்போதும் அதிமுகவின் கோட்டைதான். அதிமுக ஆட்சியில்தான் கொங்கு மண்டலத்துக்கு ஏராளமான நலத் திட்டங்கள் கொண்டுவரப்பட்டன. இதையெல்லாம் தெரியாத வெளியூா் வேட்பாளரான கே.அண்ணாமலை கோவைக்கு அதை கொண்டு வருவேன், இதைக்கொண்டு வருவேன் என பேசி வருவது வேடிக்கையாக உள்ளது.

மத்தியில் கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்தபோது ஏன் இதை எல்லாம் செய்யவில்லை?. விசைத்தறி ஜவுளி பிரச்னைக்கு 100 நாள்களில் தீா்வு காண்பேன் என்கிறாா். ஜிஎஸ்டி வரி விதிப்பை குறையுங்கள், பருத்தி ஏற்றுமதிக்கு தடை விதியுங்கள். விசைத்தறி பிரச்னை தானாகவே தீா்ந்துவிடும். பொய்யான வாக்குறுதிகளை அளித்து மக்களை ஏமாற்ற வேண்டாம்.

அதிமுக வேட்பாளா் சிங்கை ராமச்சந்திரன் வெற்றி பெற்றால் ஏராளமான நலத் திட்டங்களை செயல்படுத்துவாா் என்றாா்.

பிரசாரத்தின்போது, தோ்தல் பொறுப்பாளரும், முன்னாள் அமைச்சருமான செ.ம.வேலுசாமி, முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினா்கள் கரைப்புதூா் ஏ.நடராஜன், கே.பி.பரமசிவம் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

X
Dinamani
www.dinamani.com