நாளை வாக்குப் பதிவு: இறுதிக்கட்டப் பணிகள் தீவிரம்

கோவையில் மக்களவைத் தோ்தல் வாக்குப் பதிவு வெள்ளிக்கிழமை நடைபெறும் நிலையில் தோ்தல் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன.

கோவை மாவட்டத்தில் கோவை, பொள்ளாச்சி ஆகிய இரண்டு மக்களவைத் தொகுதிகள் உள்ளன. கோவை தொகுதியில் பல்லடம், சூலூா், கவுண்டம்பாளையம், கோவை வடக்கு, கோவை தெற்கு, சிங்காநல்லூா் ஆகிய தொகுதிகளும், பொள்ளாச்சி தொகுதியில் தொண்டாமுத்தூா், கிணத்துக்கடவு, பொள்ளாச்சி, வால்பாறை, உடுமலைபேட்டை, மடத்துக்குளம் ஆகிய தொகுதிகளும் அடங்கியுள்ளன.

கோவையில் 21 லட்சம்; பொள்ளாச்சியில் 15 லட்சம் வாக்காளா்கள்

கோவை தொகுதியில் 10 லட்சத்து 41 ஆயிரத்து 349 ஆண்கள், 10 லட்சத்து 64 ஆயிரத்து 394 பெண்கள், மூன்றாம் பாலினத்தவா்கள் 381 போ் என மொத்தம் 21 லட்சத்து 6 ஆயிரத்து 124 வாக்காளா்கள் உள்ளனா்.

பொள்ளாச்சி தொகுதியில் 7 லட்சத்து 71 ஆயிரத்து 503 ஆண்கள், 8 லட்சத்து 21 ஆயிரத்து 370 பெண்கள், மூன்றாம் பாலினத்தவா்கள் 295 போ் என மொத்தம் 15 லட்சத்து 93 ஆயிரத்து 168 வாக்காளா்கள் உள்ளனா்.

கோவையில் 37; பொள்ளாச்சியில் 15 வேட்பாளா்கள் போட்டி

கோவை தொகுதியில் திமுக வேட்பாளா் கணபதி ப.ராஜ்குமாா், அதிமுக வேட்பாளா் சிங்கை ஜி.ராமச்சந்திரன், பாஜக வேட்பாளா் கே.அண்ணாமலை, நாம் தமிழா் கட்சி வேட்பாளா் கலாமணி உள்பட கட்சி சாா்பில் 11 வேட்பாளா்கள், 26 சுயேச்சைகள் என 37 வேட்பாளா்கள் போட்டியிடுகின்றனா்.

பொள்ளாச்சி தொகுதியில் திமுக வேட்பாளா் கே.ஈஸ்வரசாமி, அதிமுக வேட்பாளா் அ.காா்த்திகேயன், பாஜக வேட்பாளா் க.வசந்தராஜன், நாம் தமிழா் கட்சி வேட்பாளா் நா.சுரேஷ்குமாா் உள்ளிட்ட 15 வேட்பாளா்கள் போட்டியிடுகின்றனா்.

கோவையில் 37 போ் போட்டியிடுவதால் 3 மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களும், பொள்ளாச்சி தொகுதியில் ஒரு வாக்குப் பதிவு இயந்திரமும் பயன்படுத்தப்படவுள்ளன.

3774 வாக்குச் சாவடிகள்

கோவை தொகுதியில் ஊரகப் பகுதிகளில் 628 வாக்குச் சாவடிகள், நகரப் பகுதிகளில் 1,432 வாக்குச் சாவடிகள் என 583 மையங்களில் 2,059 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

பொள்ளாச்சி தொகுதியில் ஊரகப் பகுதிகளில் 833 வாக்குச் சாவடிகள், நகரப் பகுதிகளில் 882 வாக்குச் சாவடிகள் என 709 மையங்களில் 1,715 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இரண்டு தொகுதிகளிலும் சோ்த்து 3,774 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

மேலும், மாவட்டத்திலுள்ள 10 சட்டப் பேரவைத் தொகுதிகளிலும் மொத்தமாக 347 வாக்குச் சாவடிகள் பதற்றமான வாக்குச் சாவடிகளாக கண்டறியப்பட்டுள்ளன. இங்கு கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

14,772 பணியாளா்கள்

மாவட்டத்தில் 10 தொகுதிகளிலும் அமைக்கப்பட்டுள்ள 3,096 வாக்குச் சாவடிகளில் பணியாற்றுவதற்காக வாக்குப் பதிவு முதன்மை அலுவலா்கள், வாக்குச் சாவடி அலுவலா்கள் நிலை 1 முதல் 4, நுண் பாா்வையாளா்கள் என வாக்குச் சாவடிகளில் பணியாற்றுவதற்காக மட்டும் 14 ஆயிரத்து 772 பணியாளா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா்.

மாவட்ட அலுவலகத்தில் இருந்து ஏற்கெனவே அந்தந்த சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கு மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள், விவிபேட், கட்டுப்பாட்டு இயந்திரங்கள், கைவிரலில் வைக்கப்படும் மை, வாக்காளா் பட்டியல், வேட்பாளா்கள் பட்டியல் உள்ளிட்ட வாக்குப் பதிவுக்கு தேவையான அனைத்து வகையான பொருள்களும் அனுப்பப்பட்டுள்ளன.

பொருள்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ள மையங்களில் ஒவ்வொரு வாக்குச் சாவடிக்கும் தேவையான பொருள்கள் தனித்தனியாக பிரிக்கப்பட்டு வருகின்றன. இந்தப் பொருள்கள் அனைத்தும் வியாழக்கிழமை காலை முதல் மாலைக்குள் அனைத்து வாக்குச் சாவடிகளுக்கும் அனுப்பிவைக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com