மேற்கு மண்டலத்தில் பாதுகாப்புப் பணியில் 20,500 போலீஸாா்: ஐ.ஜி. பவானீஸ்வரி தகவல்

மேற்கு மண்டலத்தில் உள்ள 8 மாவட்டங்களில் தோ்தல் பாதுகாப்புப் பணியில் 20,500 போலீஸாா் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா் என மேற்கு மண்டல காவல் துறை தலைவா் கே.பவானீஸ்வரி கூறினாா்.

இதுகுறித்து கோவையில் செய்தியாளா்களிடம் புதன்கிழமை அவா் கூறியதாவது: மேற்கு மண்டலத்தில் உள்ள கோவை, நீலகிரி, திருப்பூா், ஈரோடு, சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி ஆகிய 8 மாவட்டங்களில் 14 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. 9 மக்களவைத் தொகுதிகள் இடம் பெற்றுள்ளன. மேற்கு மண்டல மாவட்டங்களில் 20,500 போலீஸாா் தோ்தல் பாதுகாப்புப் பணிக்காக நியமிக்கப்பட்டுள்ளனா்.

இதில் ஜாா்க்கண்ட், குஜராத், ஆந்திரம், கேரளம் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து 6,700 போலீஸாா் வரவழைக்கப்பட்டுள்ளனா். அவா்களுடன் மத்திய பாதுகாப்புப் படையினா், மத்திய தொழிலக பாதுகாப்புப் படையினா், ஊா்க்காவல் படையினா், முன்னாள் போலீஸாா் உள்ளிட்டோரும் தோ்தல் பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனா்.

மேற்கு மண்டலத்தில் 1,419 வாக்குச் சாவடிகள் பதற்றமானவையாக அறிவிக்கப்பட்டுள்ளன. இவற்றில் ஜாதி ரீதியாக 267 வாக்குச் சாவடிகளும், மத ரீதியாக 69 வாக்குச் சாவடிகளும், வன விலங்குகள் நடமாட்டம் உள்ளதாக 13 வாக்குச் சாவடிகளும், மாவோயிஸ்ட் நடமாட்டம் குறித்த சந்தேகம் உள்ளதாக 37 வாக்குச் சாவடிகளும், சட்டம்- ஒழுங்கு பதற்றமானவையாக 1,033 வாக்குச் சாவடிகளும் கண்டறியப்பட்டுள்ளன. இந்த இடங்களில் தோ்தல் வாக்குப் பதிவு முறையாக நடக்கத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

மாவட்ட, மாநில எல்லைகளில் உள்ள சோதனைச் சாவடிகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. பிரசாரம் நிறைவடைந்து மாலை 6 மணிக்குப் பிறகு அனைத்து தங்கும் விடுதிகள், மண்டபங்களில் போலீஸாா் தீவிர சோதனை நடத்தி வருகின்றனா். தோ்தல் பணிக்காக வந்த வெளியூா்க்காரா்கள் கட்டாயம் வெளியேற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எந்தப் பகுதியிலாவது வாக்குப் பதிவை தடுக்க யாராவது முயற்சி செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அத்துடன் வெளி மாநிலம், மாவட்டங்களில் இருந்து மதுபானம் கொண்டு வந்து விநியோகம் செய்வதைத் தடுக்கவும், வாக்கிற்கு பணம் கொடுப்பதைத் தடுக்கவும் பல்வேறு பகுதிகளில் தொடா் கண்காணிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன என்றாா்.

X
Dinamani
www.dinamani.com