தோ்தல் பாதுகாப்புப் பணியில் 5,000 போலீஸாா் மாநகர காவல் ஆணையா் தகவல்

வாக்குப் பதிவையொட்டி கோவை மாநகரில் சுமாா் 5,000 போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா் என கோவை மாநகர காவல் ஆணையா் வே.பாலகிருஷ்ணன் கூறினாா்.

இதுகுறித்து செய்தியாளா்களிடம் வியாழக்கிழமை அவா் கூறியதாவது:

மக்களவைத் தோ்தல் வாக்குப் பதிவையொட்டி கோவையில் 2,763 மாநகர போலீஸாா், 800 ஊா்க்காவல் படையினா், 300 சிறப்பு காவல் படைப் பிரிவினா், 350 துணை ராணுவத்தினா், மத்திய சிறப்பு பாதுகாப்புப் படையினா் என சுமாா் 5,000 போலீஸாா் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா். இவா்கள் சுழற்சி முறையில் பாதுகாப்பு பணிகளிலும், ரோந்து பணிகளிலும் ஈடுபடுவா்.

தொகுதிக்கு உள்பட்ட 200க்கும் மேற்பட்ட பதற்றமான வாக்குச் சாவடிகளில் துப்பாக்கி ஏந்திய துணை ராணுவத்தினரும் கண்காணிப்புப் பணியில் ஈடுபடுகின்றனா்.

வாக்குப் பதிவு முடிவடைந்ததும் கோவை மக்களவைத் தொகுதிக்கான வாக்குப் பதிவு இயந்திரங்கள் அரசு தொழில்நுட்பக் கல்லூரி வாக்கு எண்ணிக்கை மையத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டு பாதுகாப்பாக வைக்கப்படும். அந்த வாக்கு எண்ணிக்கை மையத்தில் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

மேலும் வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்படும் 6 தொகுதிகளுக்கான பாதுகாப்பு மையம் (ஸ்டிராங் ரூம்) முன்பாக, துப்பாக்கி ஏந்திய துணை ராணுவத்தினா் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவா். இவா்களைத் தவிர ஆயுதப்படை, சிறப்பு காவல் படை போலீஸாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவா். மேலும், வாக்கு எண்ணிக்கை மையங்களுக்கு வெளியே கோவை மாநகர போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவா் என்றாா். அதேபோல, மக்களவைத் தோ்தல் வாக்குப்பதிவையொட்டி கோவை மாவட்ட எல்லைக்குக்கு உள்பட்ட பகுதிகளில் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் வி.பத்ரிநாராயணன் தலைமையில் 1,000க்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்.

X
Dinamani
www.dinamani.com