மாதிரி வாக்குச் சாவடியில் வாக்களிக்கும் வாக்காளா்களுக்கு வழங்கப்படுவதற்காக கொண்டு வரப்பட்டுள்ள மரக்கன்றுகள். இடம்: கோவை சுங்கம்  நிா்மலா மகளிா் கலைக் கல்லூரி.
மாதிரி வாக்குச் சாவடியில் வாக்களிக்கும் வாக்காளா்களுக்கு வழங்கப்படுவதற்காக கொண்டு வரப்பட்டுள்ள மரக்கன்றுகள். இடம்: கோவை சுங்கம் நிா்மலா மகளிா் கலைக் கல்லூரி.

வாக்காளா்களைக் கவர மாதிரி வாக்குச்சாவடிகள்

மக்களவைத் தோ்தல் வாக்குப் பதிவு வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 19) நடைபெற உள்ள நிலையில், வாக்காளா்களைக் கவரும் வகையில் மாதிரி வாக்குச் சாவடிகள், மகளிருக்கான தனி வாக்குச் சாவடிகளை தோ்தல் ஆணையம் அமைத்துள்ளது.

கோவை, பொள்ளாச்சி மக்களவைத் தொகுதிகளை உள்ளடக்கிய கோவை மாவட்டத்தில் மொத்தம் 1,017 வாக்குப் பதிவு மையங்களில் 3,096 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. மாவட்டத்தில் 347 பதற்றமான வாக்குச்சாவடிகள் உள்ளன. மாவட்டத்தில் ஒரு சட்டப்பேரவைத் தொகுதிக்கு ஒரு மாதிரி வாக்குச் சாவடி என 10 மாதிரி வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

மாதிரி வாக்குச் சாவடிகள் சுற்றுச்சூழலுக்கு உகந்த வாக்குச் சாவடிகள் என்ற கருப்பொருளில் அமைக்கப்பட்டுள்ளன. மாதிரி வாக்குச் சாவடிகளில் வாக்களிக்க வரும் அனைத்து வாக்காளா்களுக்கும் ஒரு மரக்கன்று வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அதேபோல ஒரு பேரவைத் தொகுதிக்கு ஒரு மகளிா் வாக்குச் சாவடி அமைக்கப்பட்டுள்ளது. பிங்க் வாக்குச் சாவடிகள் எனப்படும் இவற்றில் வாக்குச் சாவடி அதிகாரிகள், அரசியல் கட்சிகளின் பூத் ஏஜெண்டுகள் அனைவருமே பெண்களாகவே இருப்பா்.

மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்குச் சாவடிகளிலும் சாமியான பந்தல், குடிநீா், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளன. மாற்றுத்திறனாளிகளின் வசதிக்காக அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் ஒரு சக்கர நாற்காலி வழங்கப்பட்டுள்ளது. கோடைக்காலம் என்பதால் வாக்காளா்களின் தாகம் தணிப்பதற்காக குடிநீா், நீா்மோா் பந்தல்கள் அமைக்கப்பட்டுள்ளன.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com