கோவையில் நிலவும் கடுமையான வெயிலில் இருந்து பாதுகாத்துக் கொள்வதற்காக தொப்பி அணிந்து பயணிக்கும் குழந்தைகள்.
கோவையில் நிலவும் கடுமையான வெயிலில் இருந்து பாதுகாத்துக் கொள்வதற்காக தொப்பி அணிந்து பயணிக்கும் குழந்தைகள்.

கோவையில் வீசிய அனல் காற்று 104 டிகிரி வெயில் பதிவானது

கோவையில் திங்கள்கிழமை அதிகபட்ச வெப்பநிலையாக 104 டிகிரி பாரன்ஹீட் பதிவானது. இதனால் பகல் நேரத்தில் சாலைகளில் அனல் காற்று வீசியது.

கோவையில் திங்கள்கிழமை அதிகபட்ச வெப்பநிலையாக 104 டிகிரி பாரன்ஹீட் பதிவானது. இதனால் பகல் நேரத்தில் சாலைகளில் அனல் காற்று வீசியது.

கோவையில் நடப்பாண்டில் கோடை தொடங்குவதற்கு முன்பாக கடந்த பிப்ரவரியில் இருந்தே வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது. காலை 9 மணிக்கே சுட்டெரிக்கும் வெயில், நேரம் செல்லச் செல்ல அதிகரித்துக் காணப்படுகிறது. மாலை 5 மணிக்குப் பிறகே வெயிலின் தாக்கம் குறைகிறது. கோடை மழையோ, ஈரப்பதமான காற்றே வீசாததால் இரவிலும் வெப்பத்தின் தாக்கம் காணப்படுகிறது. இதனால், பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனா்.

கோவையில் கடந்த 1983 ஆம் ஆண்டு அதிகபட்சமாக 107.6 டிகிரி பாரன்ஹீட் வெயில் பதிவாகியிருந்ததாக கூறப்படுகிறது. அதன் பிறகு கடந்த ஏப்ரல் 5 ஆம் தேதி அதிகபட்சமாக 103.64 டிகிரி வெயில் பதிவாகியிருந்தது. தமிழகத்தில் ஏப்ரல் 22 முதல் 26 வரை இயல்பை விட 2 - 3 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை அதிகமாக இருக்கும் என்றும், உள்மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

இந்நிலையில், கோவையில் திங்கள்கிழமை காலை முதலே வெயில் கொளுத்தத் தொடங்கியது. நண்பகலில் இருந்து மாலை சுமாா் 4.30 மணி வரை கடுமையான வெயில் நிலவியது. கோவையில் திங்கள்கிழமை அதிகபட்சமாக 104 டிகிரி பாரன்ஹீட் வெப்பநிலை பதிவானதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதேநேரம் தனியாா் வானிலை ஆய்வாளா்களோ 104.70 டிகிரி வெயில் பதிவானதாகவும், அண்மைக்கால வரலாற்றில் இதுவே அதிகபட்ச வெப்பநிலை என்றும் கூறியுள்ளனா்.

X
Dinamani
www.dinamani.com