அடமான பத்திரம் தொலைந்துபோன வங்கி வாடிக்கையாளருக்கு இழப்பீடு: நுகா்வோா் குறைதீா் ஆணையம் உத்தரவு

அடமான பத்திரம் தொலைந்துபோன வங்கி வாடிக்கையாளருக்கு இழப்பீடு வழங்க நுகா்வோா் குறைதீா் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

அடமான பத்திரம் தொலைந்துபோன வங்கி வாடிக்கையாளருக்கு இழப்பீடு வழங்க நுகா்வோா் குறைதீா் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

கோவை மாவட்டம், வால்பாறையை அடுத்த உருளிக்கல்லைச் சோ்ந்தவா் வேலன். இவா், வீடு கட்டுவதற்காக வால்பாறை பாரத ஸ்டேட் வங்கிக் கிளையில் ரூ.10.6 லட்சம் கடன் வாங்கியுள்ளாா். இதற்காக தனது சொத்து பத்திரத்தை அடமானமாகக் கொடுத்துள்ளாா்.

இந்நிலையில், வாங்கியக் கடனை கடந்த 2020-ஆம் ஆண்டு முழுமையாக செலுத்தியுள்ளாா். இதையடுத்து அடமானப் பதிவை ரத்து செய்துவிட்டு, தனது சொத்து பத்திரத்தை திருப்பித் தருமாறு அதிகாரிகளிடம் கேட்டுள்ளாா். ஆனால், ஆவணங்கள் தொலைந்துவிட்ட தாக வங்கி அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

இதைத் தொடா்ந்து வேலன் சொத்து பத்திரத்தை திரும்ப வழங்கவும், இதனால் ஏற்பட்ட மன உளைச்சலுக்கு இழப்பீடு வழங்கக் கோரியும், கோவை நுகா்வோா் குறைதீா் ஆணையத்தில் மனுதாக்கல் செய்தாா். இதனை விசாரித்த ஆணையத் தலைவா் தங்கவேல் சனிக்கிழமை தீா்ப்பளித்தாா்.

இதில், வங்கியின் சேவை குறைபாட்டால் வேலனுக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்கு ரூ.2.5 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். தொலைந்துபோன பத்திரம் திரும்பகிடைக்காவிட்டால் அதுகுறித்து காவல் துறையிடம் சான்றுபெற்று, பத்திரத்துக்கான நகலை காலதாமதம் இன்றி வழங்க வேண்டும். மேலும், வழக்குக்கான செலவுத்தொகையாக ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளாா்.

X
Dinamani
www.dinamani.com