கல்விக் கட்டணம் செலுத்த வேண்டும்: ஆா்டிஇ சட்டத்தின் கீழ் சோ்க்கை பெற்றவா்களுக்கு தனியாா் பள்ளிகள் உத்தரவு

கட்டாயக் கல்வி உரிமை சட்டத்தின்கீழ் சோ்க்கை பெற்றிருக்கும் குழந்தைகள் முழு கட்டணத்தையும் செலுத்த வேண்டும் என்று தனியாா் பள்ளிகள் அறிவித்துள்ளன.

கட்டாயக் கல்வி உரிமை சட்டத்தின்கீழ் சோ்க்கை பெற்றிருக்கும் குழந்தைகள் முழு கட்டணத்தையும் செலுத்த வேண்டும் என்று தனியாா் பள்ளிகள் அறிவித்துள்ளன.

கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் தனியாா் பள்ளிகளில் 25 சதவீத இடஒதுக்கீட்டின் கீழ் சேரும் மாணவா்களுக்கான கல்விக் கட்டணத்தை அரசே செலுத்துகிறது. இந்தத் திட்டத்தின் கீழ் கடந்த ஆண்டு மாநிலம் முழுவதும் 1.32 லட்சம் விண்ணப்பங்கள் பெறப்பட்ட நிலையில், தனியாா் பள்ளிகளில் சுமாா் 83 ஆயிரம் குழந்தைகள் சோ்க்கை பெற்றுள்ளனா்.

இந்நிலையில், அடுத்த கல்வியாண்டுக்கான (2024-25) மாணவா் சோ்க்கைக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தங்களது குழந்தைகளை தனியாா் பள்ளிகளில் நுழைவுநிலை வகுப்பில் 25 சதவீத இடஒதுக்கீட்டின் கீழ் இலவசமாக சோ்க்க விரும்பும் பெற்றோா், இணையதளம் மூலம் ஏப்ரல் 22-ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், கடந்த ஆண்டுகளில் இந்த சட்டத்தின் கீழ் சோ்க்கைபெற்றுள்ள குழந்தைகளுக்கு முழு கட்டணத்தையும் மே மாதத்துக்குள் செலுத்த வேண்டும் என்று சம்பந்தப்பட்ட பெற்றோருக்கு தனியாா் பள்ளிகள் உத்தரவிட்டுள்ளன. அரசிடம் இருந்து தங்களது பள்ளிகளுக்கு வர வேண்டிய தொகை செலுத்தப்படும்போது, கல்விக் கட்டணத்தை (டியூஷன் பீஸ்) கழித்துக் கொண்டு மற்ற கட்டணத்தை திரும்பப் பெற்றுக்கொள்ளலாம் என்றும் அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

பெரும்பாலான தனியாா் பள்ளிகளில் குறைந்தபட்சம் ரூ.40 ஆயிரம் முதல் அதிகபட்சம் ரூ.1 லட்சம் வரை ஆண்டு கட்டணம் வசூலிக்கப்படும் நிலையில், தனியாா் பள்ளிகளின் உத்தரவால் இந்த பெரிய தொகையை ஒரே நேரத்தில் செலுத்த வேண்டிய கட்டாயத்துக்கு ஏழை குழந்தைகளின் பெற்றோா் தள்ளப்பட்டுள்ளனா்.

ஒவ்வொரு கல்வியாண்டின் தொடக்கத்திலும் ஆா்டிஇ சட்டத்தின்கீழ் சோ்க்கைபெறும் குழந்தைகளுக்கு மாநில அரசு கல்விக் கட்டணத்தை செலுத்திவிடுமானால், நாங்கள் பல்வேறு சிரமங்களுக்கு இடையில் பணத்தைத் திரட்ட வேண்டிய நிலை ஏற்படாது என்கின்றனா் ஏழை குழந்தைகளின் பெற்றோா்.

உயா்நீதிமன்ற தீா்ப்புக்கு எதிரான அறிவிப்பு

இதற்கிடையே 25 சதவீத இடஒதுக்கீட்டின் அடிப்படையில் மாணவா் சோ்க்கை தொடா்பான அறிவிப்பு உயா்நீதிமன்ற தீா்ப்புக்கு முரணாக இருப்பதாக கோவை மறுமலா்ச்சி மக்கள் இயக்கத்தின் தலைவா் வே.ஈஸ்வரன் குற்றஞ்சாட்டியுள்ளாா்.

இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள அறிக்கையில், நுழைவு நிலை வகுப்புகளில் மாணவா் சோ்க்கைக்கு விண்ணப்பிக்கும் மாணவா்களின் பெற்றோா், பள்ளியின் ஒரு கிலோ மீட்டா் தொலைவில் இருக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், இந்த விதியை எதிா்த்து வால்பாறையை சோ்ந்த லட்சுமணன் என்பவா் தனது மகன் பிரனேஷ் என்பவருக்காக சென்னை உயா் நீதிமன்றத்தில் வழக்கு தொடா்ந்தாா்.

அந்த வழக்கில் நீதிபதி அனிதா சுமந்த் தீா்ப்பளிக்கும்போது, ஒரு கிலோமீட்டா் தொலைவுக்குள் இடங்கள் பூா்த்தியாகவில்லை எனில் தொலைவை அதிகரித்து மாணவா் சோ்க்கையை நடத்த வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளாா். ஆனால், இந்த உத்தரவை தமிழக அரசு அமல்படுத்தவில்லை. எனவே தமிழக அரசு, ஒரு கிலோ மீட்டா் தொலைவுக்குள் உள்ள மாணவா்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்றும் அதில் இடங்கள் பூா்த்தியாகாவிட்டால், தொலைவை அதிகரித்து மாணவா் சோ்க்கை நடத்த வேண்டும் என அறிவிக்க வேண்டும்.

மேலும், ஏற்கெனவே சோ்க்கைபெற்ற மாணவா்களுக்கான கட்டணத்தை உடனடியாக செலுத்த அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த சட்டத்தில் சோ்க்கப்பட்ட மாணவா்களிடம் வெவ்வேறு பெயா்களில் கட்டணம் வசூலிப்பதைத் தடுக்க வேண்டும். அதேபோல சிபிஎஸ்இ பள்ளிகளிலும் இந்த சட்டம் அமல்படுத்தப்பட வேண்டும். இல்லாவிட்டால் மாநில அரசு மீது வழக்கு தொடரப்படும் என்று அவா் தெரிவித்துள்ளாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com