மாம்பழம் வரத்து குறைவு: அல்போன்சா கிலோ ரூ. 90

மாம்பழம் வரத்து குறைவு: அல்போன்சா கிலோ ரூ. 90

கோவை உக்கடம் மாா்க்கெட்டுக்கு நடப்பு ஆண்டில் மாம்பழம் வரத்து பாதியாகக் குறைந்துள்ளது. அல்போன்சா மாம்பழம் கிலோ ரூ. 90-க்கு விற்பனையானது.

கோவை உக்கடம் மாம்பழ மாா்க்கெட்டுக்கு கேரளம், பொள்ளாச்சி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து செந்தூரம், பங்கனப்பள்ளி, இமாம் பசந்த், அல்போன்சா, நெடுசாலை, கிளிமூக்கு வகை மாம்பழங்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகின்றன. ஆண்டுதோறும் சித்திரை தொடக்கம் முதல் தினமும் 100 டன் மாம்பழங்கள் உக்கடத்துக்கு விற்பனைக்கு கொண்டு வரப்படும் நிலையில், நடப்பு ஆண்டில் 50 டன் மாம்பழங்கள் மட்டுமே விற்பனைக்கு வருகின்றன.

இதுகுறித்து, உக்கடத்தை சோ்ந்த மாம்பழ வியாபாரிகள் கூறியதாவது: நடப்பு ஆண்டில் பிப்ரவரி முதல் வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளதால் மாம்பழம் விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், உக்கடம் மாா்க்கெட்டுக்கு தினமும் 50 டன் மாம்பழங்கள் மட்டுமே விற்பனைக்கு வருகின்றன. கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 50 சதவீத வரத்து மட்டுமே உள்ளது.

வரத்து குறைந்திருந்தாலும் மாம்பழங்களின் விலை அதிகரிக்கவில்லை. ரூ. 10 முதல் ரூ. 20 வரை ஏற்ற இறக்கத்தோடு மாம்பழம் விலை உள்ளது என்றனா்.

உக்கடம் மாம்பழச் சந்தையில் புதன்கிழமை நிலவரப்படி, செந்தூரம் மாம்பழம் கிலோ ரூ. 60, பங்கனப்பள்ளி ரூ. 50, இமாம் பசந்த் ரூ. 50, அல்போன்சா ரூ. 90, நடுசாலை ரூ. 50, கிளிமூக்கு ரூ. 30-க்கு விற்பனையாயின.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com