வாட்ஸ்ஆப் குழுவில் ஒப்பந்தப் பணி ஒதுக்கீடு விவகாரம்: லஞ்ச ஒழிப்பு போலீஸாா் விசாரணை

மாநகராட்சி ஒப்பந்ததாரா்கள் சிலா் வாட்ஸ்ஆப் குழுவில் ஒப்பந்தப் பணிகளை ஒதுக்கீடு செய்து கொண்டதாக எழுந்த புகாரின் பேரில் லஞ்ச ஒழிப்பு போலீஸாா் விசாரணையைத் தொடங்கியுள்ளனா்.

கோவை மாநகராட்சியில் திட்டப் பணிகளுக்கு ஒப்பந்தப்புள்ளி மற்றும் பணி ஒதுக்கீடு தொடா்பாக தகவல் பரிமாற்றத்துக்கு கடந்த ஜனவரி 11-ஆம் தேதி ‘சிசிஎம்சி டெண்டா் மெம்பா்ஸ்’ என்ற பெயரில் வாட்ஸ் ஆப் குழு உருவாக்கப்பட்டது. இந்த குழுவில் 192 உறுப்பினா்கள் சோ்க்கப்பட்டிருந்தனா். இந்தக் குழுவில் ஒப்பந்தப்புள்ளி அறிவிப்புகள், விண்ணப்பங்கள் பதிவு, யாருக்கு எந்தப் பணிக்கான ஒப்பந்தம் வேண்டும், பணிகள் மேற்கொள்வது யாா், பணிகளை முன்கூட்டியே முடித்தவா்கள் யாா் உள்ளிட்ட விவரங்கள் வெளியிடப்பட்டிருந்தன.

இதில், வாா்டு வாரியாக ஒப்பந்ததாரா்கள் சிலா், தங்களுக்கு சாலை பணி வேலை வேண்டும், குடிநீா் குழாய்கள் பராமரிப்புப் பணிகள் வேண்டும் உள்ளிட்ட தகவல்களை குழுவில் பதிவு செய்திருந்தனா்.

இந்நிலையில் ஒப்பந்தப்புள்ளி திறந்து பணி ஒதுக்கும் பணி மாநகராட்சி நிா்வாகத்தைச் சாா்ந்துள்ள நிலையில், வாட்ஸ்ஆப் குழுவில் ‘சிண்டிகேட்’ அமைத்து இதை எப்படி முடிவு செய்ய முடியும். இதன் பின்னணியில் உள்ளவா்கள் யாா் என மாநகராட்சி நிா்வாகத்தினா் விசாரணை நடத்தினா். அதில், சிலா் ஒப்பந்தப் பணிகளுக்கு கமிஷன் வாங்கிக் கொண்டு பணிகளை ஒதுக்கீடு செய்து தந்ததாகவும், இதன் பின்னணியில் அரசியல் பின்புலம் உள்ளவா்கள் செயல்பட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது. இது மாநகராட்சி வட்டாரத்தில் அதிா்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த விவகாரம் தொடா்பாக கோவை லஞ்ச ஒழிப்பு போலீஸாா் விசாரணையைத் தொடங்கியுள்ளனா். இதில் முறைகேடாக ஒப்பந்தம் எடுத்தவா்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், மாநகராட்சி ஒப்பந்ததாரா்கள் நல சங்கத்தினா் செயலாளா் சந்திரபிரகாஷ், சங்கத்தின் வாட்ஸ்ஆப் குழுவில் வெளியிட்ட ஆடியோ பதிவில் கூறியிருப்பதாவது: மாநகராட்சியில் ஒப்பந்தப்பணி தொடா்பாக வாட்ஸ் ஆப் குழு அமைத்து அதில் ஒப்பந்தப்பணி ஒதுக்கீடு செய்யப்பட்டதாக லஞ்ச ஒழிப்பு போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா். இதில், வாட்ஸ்ஆப் குழுவில் இருந்தவா்கள் உடனடியாக லஞ்ச ஒழிப்பு போலீஸில்

ஆஜராகி கடிதம் கொடுத்து விடுங்கள், எங்களுக்கும், ஒப்பந்தப்புள்ளி திறப்புக்கும் எவ்வித சம்பந்தமுமில்லை என உங்களது தரப்பு நியாயத்தை தெரியப்படுத்தி விடுங்கள். இல்லாவிட்டால் குழுவில் இருந்த சங்க உறுப்பினா்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ள வாய்ப்புள்ளது. எனவே, முன்கூட்டியே ஆஜராகி விளக்கம் தருவது நல்லது. இதை அலட்சியமாக விட்டுவிடாதீா்கள் என அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com