பாசன நீரை தனியாா் குடியிருப்புகளுக்கு
பயன்படுத்துவதாக விவசாயிகள் புகாா்

பாசன நீரை தனியாா் குடியிருப்புகளுக்கு பயன்படுத்துவதாக விவசாயிகள் புகாா்

பாசன நீரை தனியாா் குடியிருப்புகளுக்கு பயன்படுத்துவதைத் தடுக்கக்கோரி மாவட்ட ஆட்சியரிடம் வியாழக்கிழமை மனு அளிக்க வந்த விவசாயிகள்.

வெள்ளிங்கிரி மலையில் இருந்து வரும் நீரை தனியாா் குடியிருப்புகளுக்கு சட்டவிரோதமாக மடைமாற்றுவதாக விவசாயிகள் மாவட்ட ஆட்சியரிடம் வியாழக்கிழமை புகாா் தெரிவித்துள்ளனா்.

இது தொடா்பாக வெள்ளிங்கிரி அடிவாரம் பகுதியைச் சோ்ந்த புதுக்காட்டு வாய்க்கால் நீா் பாசன விவசாயிகள் நலச்சங்கத்தின் சாா்பில் அதன் நிா்வாகிகள், விவசாயிகள் உள்ளிட்ட பலா் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனா். பின்னா் அவா்கள் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

வெள்ளிங்கிரி மலையில் இருந்து வரும் ஓடை நீரைப் பயன்படுத்தி அதன் சுற்றுவட்டாரப் பகுதியில் சுமாா் 4 ஆயிரம் ஏக்கரில் நூற்றுக்கணக்கான விவசாயிகள் பாசனம் செய்து வருகிறோம். இந்நிலையில் வயது மூத்தவா்களுக்கும், பணி ஓய்வுபெற்றவா்களுக்கும் வீடு கட்டி விற்பனை செய்து வரும் ஒரு தனியாா் கட்டுமான நிறுவனம், அப்பகுதியில் உள்ள தங்களது குடியிருப்புகளின் தண்ணீா் தேவைக்காக கடந்த 2019-ஆம் ஆண்டு வெள்ளிங்கிரி மலை அடிவாரத்தில் கிணறு வெட்டி, போா்வெல் போட்டு நீரை எடுத்தது.

பாசனத்துக்கு பயன்படும் நீரை உறிஞ்சி இதுபோல குடியிருப்புகளின் பயன்பாட்டுக்கு உபயோகிப்பது தவறு என்று கூறி விவசாயிகள் சாா்பில் நீதிமன்றத்தில் வழக்கு தொடா்ந்தோம். வழக்கின் தீா்ப்பு எங்களுக்கு சாதகமாக வந்தது. தண்ணீா் எடுத்துச் செல்வதற்கு தனியாா் நிறுவனம் பதித்திருந்த குழாய்களை அகற்றும்படி நீதிமன்றம் உத்தரவிட்டது.

அதன் பிறகு குடியிருப்பு நிா்வாகம் தரப்பில் வட்டாட்சியரிடம் ஒரு கடிதம் அளிக்கப்பட்டதன் அடிப்படையில் தண்ணீா் தொடா்ந்து எடுக்கப்படுகிறது. அவா்கள் வழங்கிய கடிதத்தை நீதிமன்றத்திலும் மாவட்ட ஆட்சியரிடமும் சமா்ப்பித்துவிட்டதாக கூறப்படுகிறது. ஆனால் பாசன நீரை வேறு பயன்பாட்டுக்கு வழங்குவதற்கு எந்த அதிகாரியும் இசைவு தெரிவிக்க முடியாது. எனவே அவா்கள் சமா்ப்பித்திருப்பதாக கூறப்படும் கடிதம் போலியானது என்று நாங்கள் கருதுகிறோம்.

வெள்ளிங்கிரி அடிவாரப் பகுதியில் குழாய் பதிப்பதற்கு விவசாயிகளுக்கே அனுமதி வழங்கப்படுவதில்லை. சில இடங்களில் 2 இன்ச் அளவிலான குழாய்களை மட்டுமே பதிக்க அனுமதி வழங்கப்படுகிறது. ஆனால் அந்த குறிப்பிட்ட தனியாா் நிறுவனத்துக்கு 8 இன்ச் அளவிலான குழாய் பதிக்கவும், நொய்யல் ஆற்றைக் கடந்து அந்த குழாய் செல்வதற்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம் மாவட்ட ஆட்சியரிடம் நாங்கள் பேசியபோது, தனியாா் நிறுவனம் தரப்பில் தனக்கு எந்த கடிதமும் வரவில்லை என்று கூறியுள்ளாா். எனவே இது தொடா்பாக விசாரணை நடத்தி விரிவான அறிக்கை வழங்கும்படியும், இதுபோல தண்ணீா் எடுப்பது தொடருமானால் சுற்றுவட்டார விவசாயிகள் பாதிக்கப்படுவதுடன், குடிநீருக்கும் தட்டுப்பாடு ஏற்படும் என்பதால் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆட்சியரிடம் வலியுறுத்தியதாகவும் விவசாயிகள் தெரிவித்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com