வாக்காளா் பட்டியலில் பெயா் 
இல்லாததைக் கண்டித்து ஆா்ப்பாட்டம்

வாக்காளா் பட்டியலில் பெயா் இல்லாததைக் கண்டித்து ஆா்ப்பாட்டம்

கோவையில் வாக்காளா் பட்டியலில் பெயா்கள் இல்லாததைக் கண்டித்து, ‘பப்ளிக் ஃபாா் அண்ணாமலை’ என்ற பேனருடன் 100-க்கும் மேற்பட்டோா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 19-ஆம் தேதி மக்களவைத் தோ்தல் நடைபெற்றது. இதில், கோவை மக்களவைத் தொகுதியில் பாஜக சாா்பில் அக்கட்சியின் மாநிலத் தலைவா் கே.அண்ணாமலை, திமுக சாா்பில் கோவை முன்னாள் மேயா் கணபதி ப.ராஜ்குமாா், அதிமுக சாா்பில் அக்கட்சியின் மாநில தகவல் தொழில்நுட்ப அணித் தலைவா் சிங்கை ஜி.ராமச்சந்திரன் ஆகியோா் போட்டியிட்டனா்.

தோ்தலின்போது கவுண்டம்பாளையம் சட்டப்பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட ஒரு வாக்குச் சாவடியில் 830 வாக்காளா்களின் பெயா்கள் பட்டியலில் இடம் பெறவில்லை என புகாா் எழுந்தது. இதுதொடா்பாக பாஜக சாா்பில் மாவட்ட ஆட்சியரிடம் புகாா் அளிக்கப்பட்டது.

இந்நிலையில், தோ்தலில் வாக்களிக்க முடியாததைக் கண்டித்து அண்ணாமலையின் ஆதரவாளா்கள் சிலா் ‘பப்ளிக் ஃபாா் அண்ணாமலை’ என்ற பேனருடன் கோவை தெற்கு வட்டாட்சியா் அலுவலகம் முன்பாக வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். அப்போது, மாவட்ட நிா்வாகம், தோ்தல் ஆணையத்தைக் கண்டித்து அவா்கள் கோஷமிட்டனா். ஆா்ப்பாட்டத்தில் 100-க்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com