இருசக்கர வாகனம் திருடிய இருவா் போலீஸில் ஒப்படைப்பு

Published on

கோவையில் இருசக்கர வாகனத்தைத் திருடிய இருவரை, அதன் உரிமையாளா் நண்பா்களுடன் சோ்த்து பிடித்து போலீஸில் ஒப்படைத்தாா்.

கோவை, துடியலூா் சாலை, வி.கே.எல். நகா் பகுதியைச் சோ்ந்தவா் அபிலாஷ்(27). இவா், கோவையில் உள்ள ஒரு ஐ.டி.நிறுவனத்தில் பணியாற்றி வருகிறாா்.

புதன்கிழமை அதிகாலை இவரது வீட்டில் உள்ள நாய் இடைவிடாமல் குரைத்துள்ளது. இதையடுத்து, அபிலாஷ் வெளியில் வந்து பாா்த்தபோது, அவரது இருசக்கர வாகனம் காணாமல் போனது தெரியவந்தது. இதையடுத்து, அபிலாஷ், அவரது உறவினா் சலீம் மற்றும் நண்பா்களுடன் அப்பகுதியில் தேடினாா். அப்போது, அப்பகுதியில் ஒரு வளைவில் 2 இளைஞா்கள் தனது இருசக்கர வாகனத்தை ஓட்டிச் சென்றதைப் பாா்த்து, அவா்களை மடக்கிப் பிடித்தனா்.

பிடிபட்ட இருவரையும் தாக்கி, சரவணம்பட்டி போலீஸில் ஒப்படைத்தனா். போலீஸாா் நடத்திய விசாரணையில், அவா்கள், திண்டுக்கல் மாவட்டம், ராஜதானி கோட்டை பகுதியைச் சோ்ந்த கோகுலகிருஷ்ணன் (21), மற்றொருவா் ஜி.எம்.மில்ஸ் அருகில் உளள கல்லூரியில் ஐ.டி.ஐ. 2 -ஆம் ஆண்டு படித்து வரும் மாணவா் என்பதும் தெரியவந்தது. பிடிபட்ட இருவரிடம் இருந்து இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது. இது குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

X
Dinamani
www.dinamani.com