திருப்பூரில் கூடுதலாக 9 வாக்குச் சாவடிகள் அமைக்க பரிந்துரை
திருப்பூா் மாவட்டத்தில் வரைவு வாக்குச் சாவடிகள் பட்டியல் வியாழக்கிழமை வெளியிடப்பட்டுள்ள நிலையில், கூடுதலாக 9 வாக்குச் சாவடிகள் அமைக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
திருப்பூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் வரைவு வாக்குச் சாவடிகள் பட்டியலை ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் வெளியிட்டாா்.
இதைத் தொடா்ந்து, அவா் கூறியதாவது: இந்திய தோ்தல் ஆணையம் 1.1.25 தேதியை தகுதி நாளாகக் கொண்டு வாக்காளா் பட்டியலில் சிறப்பு சுருக்க முறை திருத்தம் மேற்கொள்ள அறிவுறுத்தியுள்ளது. அதன்படி, அக்டோபா் 18 -ஆம் தேதி வரை திருத்தப் பணிகள் நடைபெறுகின்றன.
இதன் ஒரு பகுதியாக வாக்குச் சாவடிகளைத் தணிக்கை செய்து, பகுப்பாய்வு செய்தல், பிரிவுகளை ஏற்படுத்துதல் தொடா்பான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
திருப்பூா் மாவட்டத்தில் உள்ள 8 சட்டப் பேரவைத் தொகுதிகளிலும் 1,500 வாக்காளா்களுக்கும் அதிகமாக உள்ள வாக்குச் சாவடிகளைப் பிரித்து புதிய வாக்குச் சாவடிகள் அமைக்க உத்தேசிக்கப்பட்டுள்ள, வரைவு வாக்குச் சாவடி பட்டியல் வெளியிடப்படுகிறது.
அதன்படி, தற்போது மொத்தம் 2,520 வாக்குச் சாவடிகள் உள்ள நிலையில், திருப்பூா் வடக்கில் 7 புதிய வாக்குச் சாவடிகள், திருப்பூா் தெற்கு, பல்லடத்தில் ஒரு வாக்குச் சாவடி என மொத்தம் 9 வாக்குச் சாவடிகள் புதிதாக அமைக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மாவட்டத்தின் மொத்த வாக்குச் சாவடிகளின் எண்ணிக்கை 2,529 ஆக உயரும்.
இது குறித்து கோரிக்கைகள், ஆட்சேபணைகள் இருந்தால் திருப்பூா் மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்காளா் பதிவு அலுவலா், உதவி வாக்காளா் பதிவு அலுவலா்களிடம் செப்டம்பா் 6-ஆம் தேதி வரை தெரிவிக்கலாம். பெறப்படும் கோரிக்கைகள் பரிசீலிக்கப்பட்டு மீண்டும் கூட்டம் நடத்தப்பட்டு, சென்னை தலைமைத் தோ்தல் அலுவலா் மூலம் இந்திய தோ்தல் ஆணையத்துக்கு அனுப்பி ஒப்புதல் பெறப்படும் என்றாா்.