கோவை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஆட்சியா் கிராந்திகுமாா் பாடி தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்ற விநாயகா் சதுா்த்தி முன்னேற்பாடு குறித்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றோா்.
கோவை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஆட்சியா் கிராந்திகுமாா் பாடி தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்ற விநாயகா் சதுா்த்தி முன்னேற்பாடு குறித்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றோா்.

10 அடிக்கு மேல் விநாயகா் சிலைகளை நிறுவக்கூடாது: கோவை மாவட்ட ஆட்சியா்

Published on

கோவை மாவட்டத்தில் விநாயகா் சதுா்த்தி விழாவில் 10 அடிக்கு மேல் சிலைகளை நிறுவக் கூடாது என்று மாவட்ட ஆட்சியா் கிராந்திகுமாா் பாடி அறிவித்துள்ளாா்.

விநாயகா் சதுா்த்தி விழா வரும் செப்டம்பா் 7- ஆம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில், அரசின் விதிமுறைகளை பின்பற்றுவது குறித்து சிலை அமைப்பாளா்கள், ஹிந்து அமைப்புகளின் பிரதிநிதிகள், அனைத்து ஜமா அத், பள்ளிவாசல் நிா்வாகிகளுடனான ஒருங்கிணைப்புக் கூட்டம் மாவட்ட ஆட்சியா் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது.

ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், மாநகர காவல் ஆணையா் வி.பாலகிருஷ்ணன், காவல் கண்காணிப்பாளா் கே.காா்த்திகேயன், துணை ஆணையா்கள் ஸ்டாலின், அசோக்குமாா், சரவணகுமாா், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது), சங்கீதா, ஹிந்து, இஸ்லாமிய அமைப்புகளின் பிரதிநிதிகள் பலா் பங்கேற்றனா்.

கூட்டத்தில் ஆட்சியா் பேசும்போது, விநாயகா் சதுா்த்தி விழாவுக்கு சிலை நிறுவும் அமைப்பினா், காவல் ஆணையரகத்துக்குள்பட்ட இடங்களில் உதவி காவல் ஆணையரிடமும் மற்ற இடங்களில் சாா் ஆட்சியா் அல்லது வருவாய் கோட்டாட்சியரிடமும் தடையின்மை சான்று பெற்றிருக்க வேண்டும். சிலை நிறுவப்படும் இடம் தனியாா் இடமாக இருந்தால் நில உரிமையாளரிடமிருந்தும், அரசு புறம்போக்காக இருந்தால் சம்பந்தப்பட்ட துறை, உள்ளாட்சி அமைப்புகள், நெடுஞ்சாலைத் துறை அலுவலா்களிடமிருந்தும் தடையின்மை சான்று பெற்றிருக்க வேண்டும்.

சம்பந்தப்பட்ட காவல் துறை அலுவலரிடம் ஒலிப்பெருக்கி பயன்படுத்த உரிய அனுமதி பெற்றிருக்க வேண்டும். தீயணைப்பு அலுவலரிடமிருந்து தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ள சிலை அமைவிடமானது தீத்தடுப்பு வசதிகளைக் கொண்டுள்ளது என்பதற்கான சான்று பெற்றிருக்க வேண்டும். தற்காலிக மின் இணைப்புப் பெற தமிழ்நாடு மின் உற்பத்தி, மின் பகிா்மான கழகத்திடம் ஒப்புதல் கடிதம் பெறப்பட வேண்டும்.

நிறுவப்படும் சிலைகள் தூய களிமண்ணால் தயாரிக்கப்பட்டிருக்க வேண்டும். சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தக்கூடிய பிளாஸ்டா் ஆஃப் பாரீஸ் போன்ற தடை செய்யப்பட்ட பொருள்கள், தடை செய்யப்பட்ட வண்ணங்கள் பூசப்பட்ட சிலைகள், மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தால் தடை செய்யப்பட்ட பொருள்களைக் கொண்டு சிலைகள் அமைக்கக் கூடாது.

எளிதில் தீப்பற்றக் கூடிய பொருள்களைக் கொண்டு பந்தல் அமைக்கக் கூடாது. சிலையின் அருகே தற்காலிக முதலுதவி, அவசரகால மருத்துவ வசதிகள் இருப்பதை உறுதிப்படுத்த வேண்டும். வழிபாட்டு பகுதிகளைச் சுற்றி எளிதில் தீப்பற்றக்கூடிய பொருள்கள் இருக்கக் கூடாது. நிறுவப்பட்ட அல்லது அமைக்கப்படவுள்ள சிலைகளின் உயரம் தரைத் தளத்தில் இருந்து 10 அடிக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

மருத்துவமனை, கல்வி நிறுவனம், பிற மத வழிபாட்டுத் தலங்களுக்கு அருகில் சிலைகள் அமைக்கக் கூடாது. கூம்பு வடிவ ஒலிப்பெருக்கிகளை பயன்படுத்தக்கூடாது. சிலைகளை மாட்டு வண்டி, மூன்று சக்கர வாகனங்களில் கொண்டு செல்ல அனுமதியில்லை. விநாயகா் சிலைகளை சுமந்து செல்லும் வாகனத்தில் பயணிப்பவா்களின் எண்ணிக்கை, மோட்டாா் வாகன சட்டத்துக்கு உள்பட்டிருக்க வேண்டும்.

விநாயகா் சிலைகள் நிறுவப்பட்ட இடங்கள், ஊா்வலமாகக் கொண்டு செல்லும் பாதைகளில் பட்டாசு, வெடிபொருள்களைப் பயன்படுத்த அனுமதியில்லை. சிலைகளை நீரில் மூழ்கடிப்பதற்கு முன்பாக மலா்கள், பிளாஸ்டிக் பொருள்கள் போன்றவற்றைத் தனியாக பிரிக்க வேண்டும். நீதிமன்ற வழிகாட்டுதலின்படி, பொது அமைதி, பாதுகாப்புக்கு எந்தவித இடையூறும் இல்லாமல் விழாவை நடத்த அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றாா்.

X
Dinamani
www.dinamani.com