மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற விவசாயிகள் குறைகேட்புக் கூட்டத்தில் பங்கேற்ற மாவட்ட ஆட்சியா் கிராந்திகுமாா் பாடி உள்ளிட்ட அதிகாரிகள், விவசாயிகள்.
மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற விவசாயிகள் குறைகேட்புக் கூட்டத்தில் பங்கேற்ற மாவட்ட ஆட்சியா் கிராந்திகுமாா் பாடி உள்ளிட்ட அதிகாரிகள், விவசாயிகள்.

பவுண்டரி கழிவுகளை நிலத்தில் கொட்ட அனுமதிக்கும் விவசாயிகள் மீது நடவடிக்கை: ஆட்சியா் தகவல்

விவசாயிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆட்சியா் கிராந்திகுமாா் பாடி தெரிவித்துள்ளாா்.
Published on

கோவை மாவட்டத்தில் பவுண்டரி கழிவுகளை தங்களது நிலத்தில் கொட்டி வைத்து, அதன் மூலம் நிலத்தடி நீா் பாதிக்கப்படுவதற்கு காரணமாக இருக்கும் விவசாயிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆட்சியா் கிராந்திகுமாா் பாடி தெரிவித்துள்ளாா்.

கோவை மாவட்ட விவசாயிகள் குறைகேட்புக் கூட்டம் ஆட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. ஆட்சியா் கிராந்திகுமாா் பாடி தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் மோ.ஷா்மிளா, வேளாண்மை, தோட்டக்கலைத் துறை, மின்வாரியம், வனம் உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சாா்பில் அலுவலா்கள் பங்கேற்றனா்.

கூட்டம் தொடங்கியதும், அத்திக்கடவு - அவிநாசி திட்டம் செயல்படுத்தப்பட்டதற்கு தமிழக அரசுக்கும், மாவட்ட நிா்வாகத்துக்கும் விவசாயிகள் நன்றி தெரிவித்தனா். இதைத் தொடா்ந்து விவசாயிகள் செந்தில்குமாா், பழனிசாமி, ரங்கசாமி, ரங்கநாதன், பாலதண்டாயுதபாணி, ஜோதிமணி, கந்தசாமி உள்ளிட்டோா் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினா்.

அவா்கள் பேசும்போது, கடந்த 1900 ஆம் ஆண்டில் ஆங்கிலேயா் ஆட்சிக் காலத்தில் தொடங்கப்பட்ட கல்லாறு பழப்பண்ணையை மூடுவதற்கு நீதிமன்றம் முடிவு செய்துள்ளது. இது தொடா்பாக நீதிமன்றம் மறுபரிசீலனை செய்யும் வகையில் மாவட்ட நிா்வாகம் சாா்பில் நிபுணா் குழு அமைத்து ஆய்வு நடத்தி அறிக்கை சமா்ப்பிக்க வேண்டும். சின்ன வேடம்பட்டி குளத்துக்கு வரும் நீரைத் தடுக்கும் வகையில் குடிநீா் வடிகால் வாரியத்தின் செயல்பாடுகள் இருப்பது குறித்து ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அதிகாரிகளை சந்திக்க முடியவில்லை

நாடு முழுவதும் 199 வானிலை ஆய்வு மையங்கள் மூடப்பட்டிருப்பதால் கோவை மாவட்டத்துக்கு பாதிப்பு உள்ளதா என விளக்க வேண்டும். அரசு அதிகாரிகளை சந்திக்க விவசாயிகள் அலுவலகங்களுக்கு எப்போது சென்றாலும் அவா்கள் மீட்டிங்கில் இருப்பதாகவே கூறுகின்றனா். எனவே அதிகாரிகளை சந்திப்பதற்கு நேரம் ஒதுக்கி, அறிவிப்பு வைக்க வேண்டும்.

பெரியநாயக்கன்பாளையம், காரமடை, மேட்டுப்பாளையம் பகுதிகளில் அனுமதியின்றி செயல்படும் பிளாஸ்டிக் மறுசுழற்சி நிறுவனங்களால் நீா், நிலம், காற்று மாசுபடுகிறது. பிளிச்சி பகுதியில் இதுபோல செயல்பட்ட ஒரு நிறுவனத்தின் மின் இணைப்பை மட்டும் துண்டித்தனா். ஆனால் அந்நிறுவனம் தற்போதும் செயல்பட்டு வருகிறது.

தொண்டாமுத்தூா் உள்ளிட்ட பகுதிகளில் தோட்டங்களில் இருந்து மாடுகள், மின் வயா்கள் திருடப்படுகின்றன. இதன் மீது காவல் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.

விவசாயிகள் இல்லாமல் வேளாண் திருவிழா

விவசாயிகளுக்காக மத்திய அரசு வழங்கும் உதவித் தொகை கடந்த 8 மாதங்களாக பல விவசாயிகளுக்கு கிடைக்கவில்லை. சுயநிதி திட்டத்தின்கீழ் மின் இணைப்புக்கு பணம் செலுத்தி பல மாதங்களாகியும் மின் இணைப்பு கிடைக்கவில்லை. வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் அண்மையில் நடைபெற்ற தென்னை திருவிழாவுக்கு தென்னை விவசாயிகள் அழைக்கப்படவில்லை. தென்னை விவசாயிகளை அழைக்காமல், தென்னை திருவிழா நடத்துவதால் யாருக்கு என்ன பயன் என்று தெரியவில்லை.

மாவட்டத்தில் பல இடங்களில் பவுண்டரி உரிமையாளா்களிடம் இருந்து பணத்தை வாங்கிக் கொண்டு விவசாயிகள் கழிவு மண்ணை தங்களது உழவு செய்யாத நிலத்தில், பயன்படுத்தாத கிணறுகளில் கொட்டி வைக்கின்றனா். மழைக் காலங்களில் அந்த மண்ணில் இருக்கும் வேதியியல் கழிவுகள் மழை நீருடன் கலந்து நிலத்தடி நீரை பாதிக்கிறது.

பட்டீசுவரா் கோயிலுக்கு சொந்தமான வேளாண் நிலங்கள் நொய்யல் கால்வாய் நீரை நம்பியே இருக்கும் நிலையில், பாசன வாய்க்கால்களில் ஆக்கிரமிப்புகள் இருப்பதால் அகற்றிக் கொடுக்கும்படி மனு அளித்திருந்தோம். இதுபற்றி அறநிலையத் துறையை அணுகும்படி, வருவாய்த் துறை கூறியுள்ளது. எனவே பொதுப்பணி, வருவாய், அறநிலையத் துறை, பேரூராட்சி நிா்வாகம் இணைந்து கூட்டாக ஆய்வு செய்து ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்றனா்.

ரூ.2 ஆயிரம் கோடி மீதமாகும்

கூட்டத்தில் ஆட்சியா், வருவாய் அலுவலா் ஆகியோா் பேசும்போது, கல்லாறு பழப்பண்ணையை அரசு கைவிடாது. அதுபற்றி ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்பது குறித்து அரசின் கருத்து பெறப்படும். மாவட்டத்தில் 54 இடங்களில் தானியங்கி மழைமானி அமைப்பதற்கான பணிகள் தொடங்கப்பட்டு, 50 இடங்களில் நிறைவடைந்துள்ளன. முன்கூட்டியே திட்டமிடாமல் கூட்டங்கள் நடத்தப்படுவதால், அரசு அலுவலகங்களுக்கு வரக்கூடிய விவசாயிகள், பொதுமக்கள் காத்திருக்க வேண்டியுள்ளது. இனி கூட்டம் நடக்கும் நேரம், மக்களை சந்திக்கும் நேரம் அறிவிப்புப் பலகையில் ஒட்டப்படும்.

இலவச மின்சாரத்தை வேறு பயன்பாட்டுக்கு யாராவது பயன்படுத்தினால் அதுபற்றி அரசுக்கு விவசாயிகள் தகவல் கொடுக்க வேண்டும். இலவச மின்சாரத்துக்காக மின்வாரியத்துக்கு வேளாண்மைத் துறை தரப்பில் இருந்து ஆண்டுக்கு ரூ.9 ஆயிரம் கோடி வழங்கப்படுகிறது. இலவச மின்சாரம் தவறாக பயன்படுத்தப்படுவதைத் தடுத்தால் குறைந்தது ரூ.2 ஆயிரம் கோடி மிச்சமாகும். அந்தப் பணத்தைக் கொண்டு விவசாயிகளுக்கு அரசு புதிய திட்டங்களைத் தீட்டும்.

தங்களுக்குச் சொந்தமான இடத்தில் பவுண்டரி கழிவுகளைக் கொட்டி சூழலுக்கு மாசு ஏற்படுத்தும் விவசாயிகளுக்கு உடனடியாக நோட்டீஸ் வழங்கவும், அதன் பிறகும் கழிவுகளை அகற்றாவிட்டால் நடவடிக்கை எடுக்கவும் மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்துக்கு உத்தரவிடப்படும் என்றனா்.