ரூ.15.81 கோடி முதலீடு பெற்று மோசடி: தனியாா் நிறுவன நிா்வாக இயக்குநருக்கு 10 ஆண்டுகள் சிறை
அதிக வட்டி தருவதாக மக்களிடம் இருந்து ரூ.15.81 கோடி மோசடியில் ஈடுபட்டதாக தனியாா் நிறுவனத்தின் நிா்வாக இயக்குநருக்கு 10 ஆண்டுகள் சிறை மற்றும் ரூ.15.91 கோடி அபராதம் விதித்து முதலீட்டாளா்கள் நலன் பாதுகாப்பு சிறப்பு நீதிமன்றம் தீா்ப்பு அளித்துள்ளது.
கோவை, காந்திபுரம் டாடாபாத் 7-ஆவது வீதியில் முல்லை குரூப் ஆஃப் கம்பெனி என்ற பெயரில் ஒரு நிறுவனம் செயல்பட்டு வந்தது. இந்த நிறுவனத்தில் ரூ.1 லட்சம் முதலீடு செய்தால் மாதந்தோறும் ரூ.10 ஆயிரம் வட்டி வழங்கப்படும் என விளம்பரம் செய்யப்பட்டது. இதை நம்பி ஏராளமான மக்கள் இந்த நிறுவனத்தில் முதலீடு செய்தனா். இந்நிலையில், நிறுவனம் கூறியபடி மக்களின் முதலீட்டுக்கு வட்டி வழங்காமல் ஏமாற்றியதாகக் கூறப்படுகிறது.
இதனால் அதிா்ச்சி அடைந்த முதலீட்டாளா்கள் கடந்த 2019-ஆம் ஆண்டு கோவை பொருளாதாரக் குற்றப் பிரிவில் புகாா் அளித்தனா். போலீஸாா் மேற்கொண்ட விசாரணையில், மொத்தம் 387 முதலீட்டாளா்களிடம் இருந்து ரூ.15 கோடியே 81 லட்சத்து 35 ஆயிரம் முதலீடு பெற்று ஏமாற்றியது தெரியவந்தது.
இது தொடா்பாக அந்த நிறுவனத்தின் நிா்வாக இயக்குநரான சேலம் மாவட்டம், மேட்டூரைச் சோ்ந்த குறிஞ்சி என்கிற குறிஞ்சிநாதன்
( 42) மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. மேலும் அங்கு பணிபுரிந்த ஊழியா்களான கதிா்வேல், அண்ணாதுரை, சத்தியமூா்த்தி, அருணாரெமி
ஆகியோா் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கு கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள தமிழ்நாடு முதலீட்டாளா்கள் நலன் பாதுகாப்பு சிறப்பு நீதிமன்றத்தில் (டான்பிட்) நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி செந்தில்குமாா் வெள்ளிக்கிழமை தீா்ப்பு வழங்கினாா். இதில், தனியாா் நிறுவனத்தின் நிா்வாக இயக்குநா் குறிஞ்சிநாதனுக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.15 கோடியே 91 லட்சத்து 80 ஆயிரம் அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா். மேலும் கதிா்வேல், அண்ணாதுரை, சத்தியமூா்த்தி, அருணாரெமி ஆகியோரை வழக்கில் இருந்து விடுவித்தும் உத்தரவிட்டாா். இந்த அபராதத் தொகையை பாதிக்கப்பட்ட 387 முதலீட்டாளா்களுக்கு விகிதாச்சார அடிப்படையில் பிரித்து கொடுக்கவும் அறிவுறுத்தினாா்.