வாக்குச்சாவடிகள் மறுசீரமைப்பு தொடா்பாக கலந்தாய்வுக் கூட்டம்
வாக்குச்சாவடிகளை மறுசீரமைப்பது தொடா்பான அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடனான கலந்தாய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு தலைமை வகித்து மாவட்ட ஆட்சியா் கிராந்திகுமாா் பாடி பேசியதாவது:
கோவை மாவட்டத்தில் உள்ள 10 சட்டப் பேரவைத் தொகுதிகளில் மறுசீரமைப்பு செய்யப்படவுள்ள வரைவு வாக்குச்சாவடிகள் பட்டியல் குறித்து விவாதிக்கப்பட்டது. இதன் அடிப்படையில் மாவட்டத்தில் ஏற்கெனவே உள்ள 3077 வாக்குச் சாவடிகளை ஆய்வு செய்த வகையில், தேவைக்கேற்ப புதிதாக 43 வாக்குச் சாவடிகள் ஏற்படுத்தவும், 52 வாக்குச் சாவடிகளில் பிரிவு மாற்றம் செய்யவும், 2 வாக்குச் சாவடிகளை புதிய இடத்துக்கு மாற்றம் செய்யவும் மற்றும் 2 வாக்குச்சாவடிகளை கட்டட மாற்றம் செய்யவும் சம்மந்தப்பட்ட வாக்காளா் பதிவு அலுவலரிடமிருந்து அறிக்கை வரப்பெற்றுள்ளது. இது தொடா்பாக ஆலோசனைகள் இருப்பின் வருகிற செப்டம்பா் 6-ஆம் தேதி மாலை 5 மணிக்குள் சம்பந்தப்பட்ட வாக்காளா் பதிவு அலுவலா்கள், மாவட்ட ஆட்சியரிடம் தெரிவிக்கலாம் என்றாா்.
இக்கூட்டத்தில் மாநகராட்சி துணை ஆணையா் சிவகுமாா், கோட்டாட்சியா்கள் கோவிந்தன், ராம்குமாா், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (தோ்தல்) செந்தில்வடிவு, வட்டாட்சியா் (தோ்தல்) தணிகைவேல் மற்றும் வாக்காளா் பதிவு அலுவலா்கள், உதவி வாக்காளா் பதிவு அலுவலா்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனா்.