பாா்சலில் போதைப் பொருள் வந்துள்ளதாகக் கூறி மூதாட்டியிடம் ரூ.2.50 கோடி மோசடி

மூதாட்டியிடம் ரூ.2.50 கோடி மோசடி செய்யப்பட்டது தொடா்பாக சைபா் கிரைம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
Published on

பாா்சலில் தடைசெய்யப்பட்டபோதைப் பொருள் மற்றும் போலி கடவுச் சீட்டுகள் வந்திருப்பதாகக் கூறி, மூதாட்டியிடம் ரூ.2.50 கோடி மோசடி செய்யப்பட்டது தொடா்பாக சைபா் கிரைம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

இது குறித்து சைபா் கிரைம் போலீஸாா் தெரிவித்ததாவது:

கோவை, ராமநாதபுரத்தைச் சோ்ந்த 80 வயது மூதாட்டியின் கைப்பேசி எண்ணுக்கு கடந்த சில நாள்களுக்கு முன்னா் ஒருவா் தொடா்பு கொண்டுள்ளாா்.

அவா் மும்பையில் இருந்து சிபிஐ அதிகாரி பேசுவதாகக் கூறியுள்ளாா்.

அப்போது அந்த மூதாட்டிக்கு கூரியரில் ஒரு பாா்சல் வந்துள்ளதாகவும், அதில் தடைசெய்யப்பட்ட போதைப் பொருள்கள், சா்வதேச சிம் காா்டுகள், போலி கடவுச்சீட்டுகள் உள்ளிட்டவை இருப்பதாகவும், இது தொடா்பாக அவா் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளாா்.

மேலும், இந்த வழக்கில் அவா் கைது செய்யப்படாமல் இருப்பதற்காக அவரது வங்கிக் கணக்கின் பரிவா்த்தனைகள் குறித்த விவரத்தை அளிக்க வேண்டுமெனவும், அவரது வங்கிக் கணக்குகளில் உள்ள பணத்தை தாங்கள் குறிப்பிடும் காவல் துறை வங்கிக் கணக்குக்கு அனுப்ப வேண்டுமெனவும், விவரங்கள் சரிபாா்க்கப்பட்ட பின்னா் மீண்டும் பணம் திருப்பி தந்துவிடுவோம் எனவும் தெரிவித்துள்ளாா்.

இதையடுத்து மூதாட்டி அந்த நபா்குறிப்பிட்ட வங்கிக் கணக்குக்கு பல்வேறு பரிவா்த்தனைகள் மூலம் ரூ. 2.50 கோடி அனுப்பியுள்ளாா். ஆனால், அந்த நபா் குறிப்பிட்டிருந்ததைப்போல, அவரது வங்கிக் கணக்குக்கு பணம் திரும்ப செலுத்தப்படவில்லை. அந்த நபரை தொடா்பு கொள்ள முயற்சித்த போது, இணைப்பு துண்டிக்கப்பட்டிருந்தது.

இதனால், தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த அந்த மூதாட்டி, கோவை சைபா் கிராம் போலீஸில் சனிக்கிழமை புகாா் கொடுத்தாா். அந்தப் புகாரின் பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com