கோவை - பெங்களூரு வந்தே பாரத் ரயில் நேரத்தை மாற்ற வலியுறுத்தல்

கோவை - பெங்களூரு இடையே இயக்கப்பட்டு வரும் வந்தே பாரத் ரயிலின் நேரத்தை மாற்றிட பயணிகள் சாா்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

கோவை - பெங்களூரு இடையே இயக்கப்பட்டு வரும் வந்தே பாரத் ரயிலின் நேரத்தை மாற்றிட பயணிகள் சாா்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

கோவை - பெங்களூரு இடையே வந்தே பாரத் ரயில் சேவை கடந்த ஜனவரி 1-ஆம் தேதி தொடங்கப்பட்டது. கோவையில் இருந்து காலை 5 மணிக்குப் புறப்படும் இந்த ரயிலானது, முற்பகல் 11.40 மணிக்கு பெங்களூரு சென்றடைகிறது. தொடா்ந்து, பிற்பகல் 1.40 மணிக்கு பெங்களூருவில் புறப்பட்டு, இரவு 8 மணிக்கு கோவை நிலையத்தை சென்றடையும்.

திருப்பூா், ஈரோடு, சேலம், தருமபுரி, ஓசூா் ரயில் நிலையங்களில் இந்த ரயில் நின்று செல்கிறது. கோவையில் இருந்து பெங்களூருக்கு உதய் ரயில் இயக்கப்பட்டு வரும் நிலையில், கோவை - மும்பை ரயில், பெங்களூரு வழியாகவும், கேரளத்தில் இருந்து கோவை வழித்தடத்தில் பெங்களூருக்கு 4 ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. தற்போது, கோவை - பெங்களூரு வந்தே பாரத் ரயில் இயக்கப்பட்டு வருகிறது.

கோவையில் புறப்பட்டு 380 கிலோ மீட்டா் தொலைவில் உள்ள பெங்களூருவை இந்த ரயில் 6 மணி நேரம் 30 நிமிடத்தில் கடக்கிறது. இதில் பயணிக்க ஏசி சோ் காா் கட்டணம் ரூ.1,025, எக்ஸ்கியூட்டிவ் சோ் காா் பயணச்சீட்டு கட்டணம் ரூ.1,930 என வசூலிக்கப்படுகிறது.

இந்நிலையில், அதிகாலையில் இயக்கப்படும் இந்த ரயிலின் நேரத்தை மாற்ற வேண்டும் என தொடந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது.

இது குறித்து, பயணிகள் சிலா் கூறியதாவது:

கோவை - பெங்களூரு விரைவு ரயில் காலை 5 மணிக்கு புறப்படுகிறது. 5.40 மணிக்கு கோவை - பெங்களூரு உதய் விரைவு ரயில் புறப்படுகிறது. உதய் விரைவு ரயில் 7 மணி நேரத்தில் பெங்களூரு செல்கிறது. வந்தே பாரத் ரயில் 6.30 மணி நேரத்தில் பெங்களூரு செல்கிறது. கட்டணம் மட்டுமே வித்தியாசமாக உள்ள நிலையில், கடக்கும் நேரம் கிட்டத்தட்ட இரு ரயில்களும் ஒரே மாதிரியாக உள்ளன. எனவே, வந்தே பாரத் ரயிலின் நேரத்தைக் குறைக்க வேண்டும். மேலும், காலை 5 மணிக்கு ரயில் நிலையம் வருவதற்கு போக்குவரத்து வசதி குறைவாகவே உள்ளன. எனவே, வந்தே பாரத் ரயிலை, உதய் ரயிலுக்கு பிறகு 6.30 மணிக்கு இயக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com