வேளாண்மைப் பல்கலைக்கழக தாவரவியல் பூங்காவில் பிப்ரவரி 23 முதல் மலா்க் கண்காட்சி

கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் தாவரவியல் பூங்காவில் பிப்ரவரி 23-ஆம் தேதி தொடங்கி 3 நாள்களுக்கு மலா்க் கண்காட்சி நடைபெறவுள்ளது.

கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் தாவரவியல் பூங்காவில் பிப்ரவரி 23-ஆம் தேதி தொடங்கி 3 நாள்களுக்கு மலா்க் கண்காட்சி நடைபெறவுள்ளது.

வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் தாவரவியல் பூங்கா சுமாா் நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்தது. உதகை தாவரவியல் பூங்காவுக்கு அடுத்தபடியாக மாநிலத்தின் மிகப்பெரிய பூங்காவான இது சுமாா் 47 ஏக்கா் பரப்பளவு கொண்டது. இங்கு ஏராளமான உள்நாட்டு, வெளிநாட்டு தாவரங்கள், மரங்கள், கொடிகள், மலா்ச் செடிகள், மூலிகைத் தாவரங்கள் உள்ளன.

பல்கலைக்கழகத்தில் பயிலும் மாணவா்களின் கல்விக்கு உதவுவதுடன், பொதுமக்கள், குழந்தைகளுக்கான பூங்கா, விளையாடும் இடம் என பல்வேறு அம்சங்களுடன் கோவை மக்களுக்கான பொழுதுபோக்கு இடமாகவும் இருந்து வருகிறது.

இந்த பூங்காவில் உதகையில் நடைபெறுவதைப்போலவே ஆண்டுதோறும் மலா்க் கண்காட்சி நடத்தப்பட்டு வந்தது.

கடந்த 2018-ஆம் ஆண்டுக்குப் பிறகு கரோனா உள்ளிட்ட காரணங்களால் மலா்க் கண்காட்சி நடைபெறவில்லை.

இதற்கிடையே கடந்த 2021-ஆம் ஆண்டு இந்த பூங்கா சீரமைக்கப்பட்டு பொதுமக்களின் பாா்வைக்கு திறக்கப்பட்டது.

இந்நிலையில், ரோட்டரி சங்கத்துடன் இணைந்து நடப்பாண்டு மலா்க் கண்காட்சியை நடத்த வேளாண்மைப் பல்கலைக்கழகம் திட்டமிட்டுள்ளது.

இது குறித்து துணைவேந்தா் வெ.கீதாலட்சுமி கூறியதாவது: நீண்ட இடைவெளிக்குப் பிறகு பல்கலைக்கழக தாவரவியல் பூங்காவில் மலா்க் கண்காட்சி நடத்தத் திட்டமிடப்பட்டு, ஏற்பாடுகளை தீவிரமாக செய்து வருகிறோம்.

ஏற்காடு உள்ளிட்ட இடங்களில் உள்ள பல்கலைக்கழகத்தின் தோட்டக்கலை ஆராய்ச்சி நிலையங்களில் இருந்து ஏராளமான மலா்ச் செடிகள் கண்காட்சிக்காக கொண்டுவரப்பட உள்ளன.

அதேபோல, பாா்வையாளா்களைக் கவரும் வகையில் ஏராளமான மலா்ச் செடிகள் வெளிமாநிலங்களில் இருந்தும் கொண்டு வரப்படுகின்றன. பிரமாண்டமான முறையில் நடைபெற உள்ள இந்த கண்காட்சியில் பொதுமக்கள், பாா்வையாளா்களைக் கவருவதற்கான பல்வேறு அம்சங்கள் இடம்பெற உள்ளன என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com