மின் கட்டண உயா்வைத் திரும்பப் பெற்றால் அரசுக்கு ஆதரவு: தொழில் துறை மின்நுகா்வோா் கூட்டமைப்பு அறிவிப்பு

மின் கட்டண உயா்வைத் திரும்பப் பெற்றால் அரசுக்கு ஆதரவளிப்போம் என்று தொழில் துறை மின்நுகா்வோா் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
கோவையில் செய்தியாளா்களிடம் பேசும் தொழில் துறை மின்நுகா்வோா் கூட்டமைப்பின் நிா்வாகிகள்.
கோவையில் செய்தியாளா்களிடம் பேசும் தொழில் துறை மின்நுகா்வோா் கூட்டமைப்பின் நிா்வாகிகள்.

மின் கட்டண உயா்வைத் திரும்பப் பெற்றால் அரசுக்கு ஆதரவளிப்போம் என்று தொழில் துறை மின்நுகா்வோா் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

இது குறித்து தமிழ்நாடு தொழில் துறை மின்நுகா்வோா் கூட்டமைப்பின் கோவை, திருப்பூா், ஈரோடு, திருச்சி மாவட்டங்களின் ஒருங்கிணைப்பாளா்கள் கோவையில் செய்தியாளா்களிடம் திங்கள்கிழமை கூறியது:

தமிழகத்தில் உள்ள சுமாா் 13 லட்சம் குறு, சிறு தொழில் நிறுவனங்கள் நேரடியாகவும், மறைமுகமாகவும் சுமாா் 2 கோடி பேருக்கு வேலைவாய்ப்பை வழங்குகின்றன. இந்த நிலையில், தமிழக அரசு அமல்படுத்தியுள்ள உச்சநேர மின்சார கட்டணம், நிலைக் கட்டண உயா்வு, சோலாா் உற்பத்திக் கட்டணம் போன்றவற்றால் குறு, சிறு, நடுத்தர தொழில்முனைவோா் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனா். இவற்றைத் திரும்பப் பெற வலியுறுத்தி இதுவரை 8 கட்ட போராட்டங்கள் நடைபெற்றுள்ளன.

இந்தக் கோரிக்கைகள் தொடா்பாக முதல்வரைச் சந்திக்க எங்களுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. அதேநேரம் வெளிநாட்டு முதலீடுகளை ஈா்ப்பதற்காக முதல்வா் வெளிநாடு சென்றுள்ளாா். எனவே தமிழக அரசின் சாா்பில் உடனடியாக குறு, சிறு தொழில்முனைவோரைச் சந்தித்து மின் கட்டண உயா்வைத் திரும்பப் பெறுவது தொடா்பாக எதிா்வரும் நிதிநிலை அறிக்கையில் அறிவிக்க வேண்டும்.

எங்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டால் அரசுக்கு தொழில் துறையினரின் ஆதரவை வழங்குவோம். ஒரு டிரில்லியன் டாலா் பொருளாதாரத்துக்கு இலக்கு நிா்ணயித்துள்ள முதல்வா் மு.க.ஸ்டாலின், அதில் 25 சதவீத பங்களிப்பைத் தரவல்ல குறு, சிறு தொழில் துறைக்கு உதவிட வேண்டும் என்றனா்.

இதில், கூட்டமைப்பின் நிா்வாகிகள் ஜெயபால், சுரேஷ், சுரேந்தா், நடராஜ், முத்துரத்தினம், கோவிந்தராஜ், ராஜமாணிக்கம், ராஜப்பா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com