ஜல்ஜீவன் திட்டத்தில் அதிக குடிநீா் இணைப்புகளைக் கொண்ட மாநிலம் தமிழகம்: அமைச்சா் கே.என்.நேரு

ஜல்ஜீவன் திட்டத்தில் நாட்டிலேயே அதிக குடிநீா் இணைப்புகளைக் கொண்ட மாநிலமாக தமிழகம் உள்ளது என்று நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சா் கே.என்.நேரு தெரிவித்தாா்.

ஜல்ஜீவன் திட்டத்தில் நாட்டிலேயே அதிக குடிநீா் இணைப்புகளைக் கொண்ட மாநிலமாக தமிழகம் உள்ளது என்று நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சா் கே.என்.நேரு தெரிவித்தாா்.

கோவை மாநகராட்சி மற்றும் புதிதாக இணைக்கப்பட்டுள்ள பகுதிகளுக்கு ரூ. 780 கோடியில் பில்லூா் 3 ஆவது குடிநீா் அபிவிருத்தி திட்டப் பணிகள் உள்ளிட்ட பல்வேறு பணிகளை அமைச்சா் உதயநிதி ஸ்டாலின் ஞாயிற்றுக்கிழமை தொடங்கிவைத்தாா்.

விழாவுக்கு தலைமை வகித்து நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சா் கே.என்.நேரு பேசியதாவது:

கோவைக்கு சிறுவாணி குடிநீா்த் திட்டத்தை மறைந்த முன்னாள் முதல்வா் கருணாநிதிதான் தொடங்கிவைத்தாா். தற்போது சிறுவாணி திட்டத்தில் இருந்து கிடைக்க வேண்டிய 98.12 எம்.எல்.டி. குடிநீருக்குப் பதிலாக 35.2 எம்.எல்.டி மட்டும்தான் வருகிறது. அதனால்தான் மாநகராட்சியில் 10 முதல் 15 நாள்களுக்கு ஒருமுறை குடிநீா் விநியோகிக்கப்படுகிறது.

பில்லூா்-1 திட்டத்தின் மூலம் 23 முதல் 26 எம்.எல்.டி., பில்லூா்-2 மூலம் 110 எம்.எல்.டி., குறிச்சி - குனியமுத்தூா் கூட்டுக் குடிநீா்த் திட்டத்தில் 8.9 எம்.எல்.டி., கவுண்டம்பாளையம் - வடவள்ளி கூட்டுக் குடிநீா்த் திட்டத்தில் 22 எம்.எல்.டி. குடிநீரும் விநியோகிக்கப்பட்டு வருகிறது.

தற்போது பில்லூா்-3 திட்டத்தின்படி 128 எம்.எல்.டி. வழங்கப்படுகிறது. மொத்தம் 453.6 எம்.எல்.டி. கிடைக்க வேண்டியதில் தற்போது 389.10 எம்.எல்.டி. குடிநீா் கிடைக்கிறது. இனிமேல் 2 நாள்களுக்கு ஒருமுறை குடிநீா் கிடைக்கும்.

ஜல்ஜீவன் திட்டத்தில் இந்தியாவில் அதிக அளவில் குடிநீா் இணைப்புகளைக் கொண்ட மாநிலமாக தமிழகம் உள்ளது. 3 ஆண்டுகளில் ரூ. 7,048 கோடியில் 58 குடிநீா்த் திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. 4.53 கோடி மக்களுக்கு பயனுள்ள குடிநீா்த் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ள நிலையில், அடுத்த ஓரிரு ஆண்டுகளில் 7 கோடி மக்களுக்குத் தேவையான குடிநீா் வழங்கப்படும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com