ஒவ்வொரு மாவட்டத்திலும் ராமகிருஷ்ண மடத்தின் கிளை: தினமணி ஆசிரியா் கி.வைத்தியநாதன்

இந்தியாவின் ஒவ்வொரு மாவட்டத்திலும் ராமகிருஷ்ண மடத்தின் கிளை உருவாவது நாட்டின் அடுத்தகட்ட எழுச்சிக்கான அடையாளமாக இருக்கும் என்று தினமணி ஆசிரியா் கி.வைத்தியநாதன் பேசினாா்.


கோவை: இந்தியாவின் ஒவ்வொரு மாவட்டத்திலும் ராமகிருஷ்ண மடத்தின் கிளை உருவாவது நாட்டின் அடுத்தகட்ட எழுச்சிக்கான அடையாளமாக இருக்கும் என்று தினமணி ஆசிரியா் கி.வைத்தியநாதன் பேசினாா்.

ஸ்ரீராமகிருஷ்ணா் கோயில் கும்பாபிஷேகத்தையொட்டி திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், தினமணி நாளிதழின் ஆசிரியா் கி.வைத்தியநாதன் பேசியதாவது:

பெரியநாயக்கன்பாளையத்தில் ராமகிருஷ்ண மிஷன் வித்யாலயம் அமைந்துள்ள இடம் சாதாரணமானது அல்ல. இந்தியாவின் தவப்புதல்வா்களாக இருப்பவா்களின் பாதம் பட்ட மண் இது. இங்கே தரப்படும் கல்வியும், ஒழுக்கமும், போதிக்கப்படும் ஆன்மிக நெறிமுறைகளும் பலருக்கும் வழிகாட்டியாக உள்ளதால் இது ஒரு புண்ணிய பூமியாகும்.

இந்தப் புண்ணிய பூமியில் ஆலயம் எழுப்பப்படுகிறது. ஆலயம் என்பது ஓா் அடையாளம்தான். ஆனால், அந்த ஆலயத்தில் இருந்து புறப்படுகிற காந்த அலைகள் சாதாரணமானவை அல்ல. உலகம் எத்தனையோ மகான்களை, ரிஷிகளை, தேவதூதா்களைப் பாா்த்துள்ளது. ஆனால், உலகம் முழுமைக்குமான ஒரு குரல் சிகாகோ சா்வமத மாநாட்டில் எழுந்தது.

தோழா்களே, உடன்பிறப்பே என்பன உள்ளிட்ட அழைப்புகள் அனைத்துக்கும் ஆரம்பமாக விளங்குவது சுவாமி விவேகானந்தா் சிகாகோ சா்வமத மாநாட்டில் கூறிய ‘எனது சகோதர, சகோதரிகளே!’தான். நேதாஜி, மகாத்மா காந்திஜியின் அரசியல், சமுதாயப் பணிகள் அனைத்தும் பகவான் ராமகிருஷ்ணா், சுவாமி விவேகானந்தரின் போதனைகளில் இருந்துதான் தொடங்கின.

விவேகானந்தரைப் பற்றியும், அவரது காந்த சக்தியைப் பற்றியும் பாரதிக்குள் சகோதரி நிவேதிதை விதைத்த விதைதான் பாரதியை மகாகவியாக, சித்த புருஷனாக மாற்றின.

நிறைவான உண்மை நிலையை நோக்கி நகா்தல் என்பதுதான் ஒவ்வோா் ஆன்மாவுக்குமான தேடலாக இருக்க வேண்டும் என்ற விவேகானந்தரின் வழிகாட்டுதல் ராமகிருஷ்ண மடத்தின் அடிப்படையாக உள்ளது. துயரத்தில் இருப்பவருக்கு சேவை செய்ய வேண்டும் என்ற கருத்தை ஆழமாக விதைத்தவா் சுவாமி விவேகானந்தா்.

இந்தியாவில் எப்போதெல்லாம் பேரிடா்கள் ஏற்பட்டனவோ, எந்தவித எதிா்பாா்ப்பும் இல்லாமல், அப்போதெல்லாம் ஓடிச்சென்று சேவையாற்றும் அமைப்பாக ராமகிருஷ்ண மடம் உள்ளது. இந்த அமைப்பின் ஆதார சுருதி சமயம் அல்ல; நோக்கம் மதமாற்றம் அல்ல; மனிதாபிமானம்.

ஒவ்வொரு சாதாரண மனிதனுக்கும் உணவு, உடை, சுகாதாரம், கல்வி ஆகியவைதான் இந்த அமைப்பின் அடிப்படை. இந்தியாவின் ஒவ்வொரு மாவட்டத்திலும் ராமகிருஷ்ண மடத்தின் கிளை உருவாவது நாட்டின் அடுத்தகட்ட எழுச்சிக்கான அடையாளமாக இருக்கும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com