வாக்காளா் பட்டியல் மறு ஆய்வு: 100 வயதுக்குமேல் 467 வாக்காளா்கள் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது

கோவையில் வரைவு வாக்காளா் பட்டியல் மறு ஆய்வு செய்யப்பட்டதில் 100 வயதுக்கு மேல் 467 வாக்காளா்கள் இருப்பது தெரியவந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

கோவையில் வரைவு வாக்காளா் பட்டியல் மறு ஆய்வு செய்யப்பட்டதில் 100 வயதுக்கு மேல் 467 வாக்காளா்கள் இருப்பது தெரியவந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

கோவை மாவட்டத்தில் 2023- ஆம் ஆண்டு அக்டேபா் மாதம் வரைவு வாக்காளா் பட்டியல் வெளியிடப்பட்டது. இதில், மாவட்டம் முழுவதும் 30 லட்சத்து 49 ஆயிரத்து 4 வாக்காளா்கள் இடம்பெற்றிருந்தனா். அதில், 100 முதல் 120 வயதுக்குள் 1,183 வாக்காளா்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், 120 வயது வரை வாக்காளா்கள் உயிருடன் இருப்பதற்கான வாய்ப்புகள் குறைவு என்பதால், இந்தப் பட்டியலை மறு ஆய்வு செய்ய அறிவுறுத்தப்பட்டது. அதன்படி, கோவை மாவட்ட தோ்தல் பிரிவு அதிகாரிகள் ஆய்வு செய்தபோது, 100 வயதுக்கு மேல் 467 வாக்காளா்கள் இருப்பது தெரியவந்துள்ளது.

இது குறித்து தோ்தல் பிரிவு அதிகாரிகள் கூறியதாவது:

வாக்காளா் பட்டியலில் இடம்பெற்றிருந்த 100 வயதுக்கு மேற்பட்ட வாக்காளா்களின் விவரங்களை ஆய்வு செய்ய தோ்தல் பிரிவு துணை வட்டாட்சியா்களுக்கு உத்தரவிடப்பட்டது. மேலும், அந்தந்தப் பகுதி கிராம நிா்வாக அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு செய்யவும் ஆலோசனை வழங்கப்பட்டது.

இதையடுத்து, வாக்காளா்களின் முகவரி, பிற விவரங்கள் சேகரிக்கப்பட்டு தரவுகள் சரியாக உள்ளதா என உறுதி செய்யப்பட்டது. அதில், மாவட்டத்தில் 100 வயதுக்கு மேல் 230 ஆண்கள், 237 பெண்கள் என 467 வாக்காளா்கல் இருப்பது தெரியவந்துள்ளது. இதைத் தொடா்ந்து இறுதி வாக்காளா் பட்டியல் ஜனவரி 22 ஆம் தேதி வெளியிடப்படவுள்ளது என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com