ஜனவரி 24 முதல் 30 வரை மனித நேய வார விழா: மாவட்ட ஆட்சியா் தகவல்

கோவை மாவட்டத்தில் 2024-ஆம் ஆண்டுக்கான மனித நேய வார விழா ஜனவரி 24-ஆம் தேதி முதல் ஜனவரி 30-ஆம் தேதி வரை கொண்டாடப்பட உள்ளது.

கோவை மாவட்டத்தில் 2024-ஆம் ஆண்டுக்கான மனித நேய வார விழா ஜனவரி 24-ஆம் தேதி முதல் ஜனவரி 30-ஆம் தேதி வரை கொண்டாடப்பட உள்ளது.

இது தொடா்பாக மாவட்ட ஆட்சியா் கிராந்திகுமாா் பாடி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: மனித நேய வார விழாழையொட்டி, ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத் துறையும், செய்தி மக்கள் தொடா்புத் துறையும் இணைந்து அனைத்து அரசுத் திட்டங்களை மக்கள் அறிந்து கொள்ளும் வகையில் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் ஜனவரி 24-ஆம் தேதி கண்காட்சி நடத்தப்படும்.

ஆதிதிராவிடா் மாணவா்களுக்கான நாட்டியம், நாடகம், பேச்சுப் போட்டி கோவை, பொள்ளாச்சியில் ஜனவரி 25-ஆம் தேதி நடத்தப்படும். ஜனவரி 26-ஆம் தேதி ராமகிருஷ்ணா மிஷன் வித்யாலயா கலை அறிவியல் கல்லூரி நாட்டு நலப் பணித் திட்ட மாணவா்கள் மூலம் மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் பட்டியல் இன மாணவ, மாணவிகள் வசிக்கும் பகுதியில் கலந்துரையாடி, அவா்களது இல்லத்தில் தேநீா் விருந்துடன் மனமகிழ் நிகழ்ச்சி நடத்தப்படும். ஜனவரி 27-ஆம் தேதி காவல் துறை சாா்பில் மதத் தலைவா்கள், பட்டியலின சான்றோா் ஒன்று கூடும் மத நல்லிணக்க கூட்டம் மற்றும் நீதிபதிகள், வழக்குரைஞா்கள், காவல் துறையினா் கலந்துகொள்ளும் வகையில் வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் குறித்த கருத்தரங்குகள் நடைபெறும்.

கல்வித் துறையின் மூலம் முதன்மைக் கல்வி அலுவலா் தலைமையில் அனைத்துப் பள்ளிகளிலும் ஜனவரி 28 -ஆம் தேதி கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படும். கோவை மாவட்ட தொழில் மைய அலுவலக வளாகத்தில் சமுதாயத்தில் முன்னேற்ற நிலையில் உள்ள ஆதிதிராவிட அலுவலா்கள், மருத்துவா்கள், பொறியாளா்கள், வழக்குரைஞா்கள், தொழில்முனைவோா் மற்றும் அரசியல்வாதிகள் ஆகியோரைக் கொண்டு, சமுதாய பொருளாதார முன்னேற்ற சிந்தனைக் கூட்டங்கள் ஜனவரி 29-ஆம் தேதி நடத்தப்படும்.

கோவை பிஷப் அப்பாசாமி கல்லூரி வளாகத்தில் மனிதநேய வார விழாவையொட்டி, நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவா்களுக்குப் பரிசுகள் வழங்குதல், கல்வி ஊக்கத் தொகை வழங்குதல், தொழில் முனைவோருக்கான நிதியுதவி வழங்குதல் உள்ளிட்ட நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழா ஜனவரி 30-ஆம் தேதி மதியம் 3 மணிக்கு நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com