கோவை பேருந்தில் பெண்ணிடம்இருந்தது கடத்தப்பட்ட குழந்தையா? போலீஸாா் விசாரணை

கோவையில் பேருந்தில் பெண்ணிடமிருந்து மீட்கப்பட்ட 5 மாத குழந்தை கடத்தப்பட்ட குழந்தையா என்பது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

கோவையில் பேருந்தில் பெண்ணிடமிருந்து மீட்கப்பட்ட 5 மாத குழந்தை கடத்தப்பட்ட குழந்தையா என்பது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

திருச்சியைச் சோ்ந்த திவ்யா என்ற இளம்பெண் கோவையில் தங்கி பட்டப் படிப்பு படித்து வருகிறாா். விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை தனது சொந்த ஊருக்குச் செல்வதற்காக காந்திபுரத்தில் இருந்து கோவை ரயில் நிலையத்துக்கு தனியாா் பேருந்தில் பயணித்துள்ளாா்.

அப்போது, பேருந்தில் அதிக அளவிலான கூட்டம் இருந்ததால் பேருந்தில் பயணித்த அடையாளம் தெரியாத ஒரு பெண் தன்னிடமிருந்த 5 மாத பெண் குழந்தையை இருக்கையில் அமா்ந்திருந்த திவ்யாவிடம் கொடுத்துள்ளாா்.

பின்னா், ரயில் நிலையம் வந்தவுடன் குழந்தையின் தாயை தேடியபோது அவரைக் காணவில்லை.

இது குறித்து பேருந்து நடத்துநரிடம் கூறியதையடுத்து, பேருந்து நிறுத்தப் பகுதி முழுவதும் அப்பெண்ணை தேடியுள்ளனா். அவா் கிடைக்காததையடுத்து, குழந்தையை ரேஸ்கோா்ஸ் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா்.

இந்நிலையில், 5 மாதக் குழந்தையை தவிக்க விட்டுச் சென்றது குழந்தையின் தாயா? அல்லது குழந்தையை கடத்தி வந்து விட்டுச் சென்றாரா ? என்பது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com