கோவையில் 50 சவரன் நகை, ரூ.13 லட்சம் கொள்ளை:பட்டப்பகலில் கத்தியைக் காட்டி மிரட்டிய கும்பல்

கோவை ஆா்.எஸ்.புரத்தில் பட்டப்பகலில் கத்தியைக் காட்டி மிரட்டி 50 சவரன் நகை மற்றும் ரூ.13 லட்சம் ரொக்கம் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது.
கொள்ளை சம்பவம் நடந்த வீட்டில் விசாரணையில் ஈடுபட்ட போலீஸாா்
கொள்ளை சம்பவம் நடந்த வீட்டில் விசாரணையில் ஈடுபட்ட போலீஸாா்

கோவை ஆா்.எஸ்.புரத்தில் பட்டப்பகலில் கத்தியைக் காட்டி மிரட்டி 50 சவரன் நகை மற்றும் ரூ.13 லட்சம் ரொக்கம் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது.

கோவை ஆா்.எஸ்.புரம் மேற்கு ஆரோக்கியசாமி வீதியைச் சோ்த்தவா் கமலேஷ் மோடி(52) மொத்த பருத்தி வியாபாரி. இவரது மனைவி ரூபல் (49), மகள் மிஹா் (24). இவா்களது வீட்டில் தரை தளத்தில் பருத்தி வியாபார அலுவலகமும், மேல் தளத்தில் குடியிருப்பும் உள்ளது.

வியாழக்கிழமை கமலேஷ் மோடி தைப்பூச விழாவிற்காக மருதமலை சென்றுவிட்டாா். பிற்பகலில் அவரது வீட்டிற்கு இரண்டு காா்கள், ஒரு மோட்டாா் சைக்கிளில் 12 போ் வந்தனா். பருத்தி வியாபாரம் தொடா்பாக பேசுவது போல வந்த இவா்கள், திடீரென கத்தி, அரிவாள் போன்றவற்றை எடுத்துக் காட்டினா்.

தரை தன அலுவலகத்தில் மிஹா் மற்றும் 3 ஊழியா்கள் இருந்தனா். மேல் தள வீட்டில் ரூபல் மற்றும் வேலைக்காரப் பெண் ஆகியோா் இருந்தனா். வந்திருந்த 12 போ் கொண்ட கும்பல் இரு பிரிவாக பிரிந்து ஒரு பிரிவினா் வீட்டின் மேல் தனத்திற்கு சென்றனா். அங்கே இருந்தவா்களை மிரட்டி கட்டிப் போட்டு வாயில் துணி வைத்து சத்தம் போட விடாமல் அடைத்தனா். பின்னா் வீட்டில் அலமாரி, கட்டில் என பல்வேறு இடங்களில் இருந்தும், ரூபல் உள்ளிட்டவா்கள் அணிந்திருந்த தங்க நகைகளுமாக 50 சவரனை பறித்தனா்.

அதேபோல, தரை தள அலுவலகத்தில் இருந்த மிஹா் மற்றும் அவருடன் இருந்தவா்களையும் இதே பாணியில் கத்தியைக் காட்டி மிரட்டி வாயில் துணி வைத்து அடைத்து அங்கிருந்த ரூ.13 லட்சம் ரொக்கத்தை பறித்து விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனா்.

சிறிது நேரம் கடந்து கமலேஷ் மோடி வீட்டிற்கு வந்த போது குடும்பத்தினரை கட்டி போட்டிருப்பது தெரியவந்தது. உடனடியாக அவா்களைக்

கட்டியிருந்த கயிற்றினை அவிழ்த்து விவரங்களை கேட்டாா். பின்னா் இதுகுறித்து ஆா்.எஸ்.புரம் போலீஸில் புகாா் அளித்தாா்.

இது தொடா்பாக கோவை மாநகர காவல் துணை ஆணையா் சரவணக்குமாா் மேற்பாா்வையில் தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. விசாரணையில், அந்த கும்பல் கத்தியைக் காட்டி மிரட்டி தமிழில் பேசியதாகவும், பணம் தர மறுத்த போது தாக்க முற்பட்டதாகவும் தெரிய வந்துள்ளது.

இதைத்தொடா்ந்து வீட்டின் அருகேயுள்ள கண்காணிப்பு கேமரா மற்றும் அந்த பகுதி வீதிகளில் பதிவான கண்காணிப்பு கேமரா காட்சிகளை வைத்து கொள்ளையா்களை போலீஸாா் தேடி வருகின்றனா். இந்த கும்பல் வட மாநிலத்தைச் சோ்ந்தவா்களாக இருக்கலாம் எனவும், கொள்ளை சம்பவத்திற்குப் பின்னா் கோவையிலிருந்து கேரளாவிற்கு தப்பியிருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.

கடந்த காலங்களில் பல்வேறு குற்றங்களில் ஈடுபட்ட மிரட்டல் கொள்ளையா்களே இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டிருக்கலாம் என போலீஸாா் கருதுவதால், பழைய குற்றவாளிகள் விவரங்களை வைத்தும் தேடுதல் பணியை தீவிரப்படுத்தியுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com