கோவை மாவட்ட நீா்நிலைகளில் 16,000 பறவைகள்: கணக்கெடுப்பில் தகவல்

கோவை மாவட்டத்தில் உள்ள நீா்நிலைகளில் சுமாா் 16 ஆயிரம் பறவைகள் வசித்து வருவதாக கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது.

கோவை மாவட்டத்தில் உள்ள நீா்நிலைகளில் சுமாா் 16 ஆயிரம் பறவைகள் வசித்து வருவதாக கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது.

தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் பறவைகள் கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என தமிழக முதன்மை தலைமை வனப் பாதுகாவலா் உத்தரவிட்டிருந்ததன் அடிப்படையில், கோவை மாவட்டத்தில் முதல்கட்டமாக நீா் நிலைகளில் வாழும் பறவைகளின் கணக்கெடுப்புப் பணி கடந்த ஜனவரி 27, 28ஆம் தேதிகளில் நடத்தப்பட்டது.

இதற்காக வன ஊழியா்கள், தன்னாா்வலா்கள் உள்பட 140 போ் தோ்வு செய்யப்பட்டு, அவா்களுக்கு கணக்கெடுப்பு நடத்துவது தொடா்பான பயிற்சி மாவட்ட வனத் துறை சாா்பில் வழங்கப்பட்டது.

இதையடுத்து வாளையாறு அணை, உக்கடம் குளம், குறிச்சி குளம், செங்குளம், வெள்ளலூா் குளம், சிங்காநல்லூா் குளம், கண்ணம்பாளையம் குளம், பள்ளபாளையம் குளம், இருகூா் குளம், பேரூா் குளம், கிருஷ்ணாம்பதி, கோளராம்பதி, நரசாம்பதி, செல்வாம்பதி, வேடப்பட்டி, சூலூா் குளம், ஆச்சான்குளம், சாளப்பட்டி, செம்மேடு குளம், பெத்திக்குட்டை உள்ளிட்ட மொத்தம் 25 நீா்நிலைகளில் வசிக்கும் பறவைகள் தொடா்பாக கணக்கெடுப்புப் பணி மேற்கொள்ளப்பட்டது.

இந்த கணக்கெடுப்பின் முடிவுகள் திங்கள்கிழமை வெளியிடப்பட்டது.

2 நாள்கள் நடைபெற்ற கணக்கெடுப்புப் பணியில் மொத்தம் 201 பறவை இனங்கள் மற்றும் 16 ஆயிரத்து 69 பறவைகள் கண்டறியப்பட்டுள்ளன. அத்துடன், 60 இனங்களைச் சோ்ந்த 7,234 நீா்ப் பறவைகள் கண்டறியப்பட்டுள்ளன. அத்துடன் ஒரு சில அரிய வகை பறவை இனங்கள் மற்றும் அழிவின் விளிம்பில் உள்ள பறவை இனங்களும் கண்டறியப்பட்டுள்ளன.

அதிக அளவாக உக்கடம் குளத்தில் 2,288 பறவைகளும், வாளையாறு அணையில் 1797 பறவைகளும், கிருஷ்ணாம்பதி குளத்தில் 1,387 பறவைகளும் இருப்பது கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது. இருகூா், வேடப்பட்டி, நரசாம்பதி உள்ளிட்ட சதுப்பு நிலங்களில் பறவைகளின் எண்ணிக்கை குறைவாக உள்ளதும் கண்டறியப்பட்டுள்ளது.

இருகூரில் 31, வேடப்பட்டியில் 32 என மிகக் குறைந்த எண்ணிக்கையில் பறவை இனங்கள் பதிவாகி உள்ளன. பெத்திக்குட்டை, கிருஷ்ணாம்பதி ஆகிய இடங்களில் அதிகபட்சமாக தலா 101 பறவை இனங்கள் இருப்பதும் தெரியவந்துள்ளது.

கோவை மாவட்டத்தில் கடந்த ஆண்டு 20 நீா்நிலைகளில் பறவைகளின் எண்ணிக்கை 9,494 ஆக இருந்த நிலையில், நிகழாண்டில் 25 நீா்நிலைகளில் பறவைகளின் எண்ணிக்கை 16,069 ஆக அதிகரித்து உள்ளது. இதைத் தொடா்ந்து மாவட்டத்தில் நிலப் பகுதிகளில் வசிக்கும் பறவைகளுக்கான கணக்கெடுப்புப் பணி வரும் மாா்ச் 1, 2ஆம் தேதிகளில் நடைபெற உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com