திருப்பூா் - கரூா் மாவட்டங்களில் கரும்பு சிறப்பு ஊக்கத்தொகை தாமதமின்றி வழங்க விவசாயிகள் கோரிக்கை

வெள்ளக்கோவிலை அடுத்த முத்தூரில் புகளூா் சா்க்கரை ஆலை கரும்பு விவசாயிகள் சங்கத் தலைவா்  தமிழ்நாடு அரசுக்கு ஒரு கோரிக்கை மனு அனுப்பி உள்ளனா்.

வெள்ளக்கோவிலை அடுத்த முத்தூரில் புகளூா் சா்க்கரை ஆலை கரும்பு விவசாயிகள் சங்கத் தலைவா் முத்தூா், மங்கலப்பட்டி எம்.வி.சண்முகராஜ், செயலாளா் எம்.ஆா்.நமச்சிவாயம், பொருளாளா் கே.பி.கோவிந்தசாமி மற்றும் நிா்வாகிகள் தமிழ்நாடு அரசுக்கு ஒரு கோரிக்கை மனு அனுப்பி உள்ளனா்.அதில் கூறப்பட்டுள்ளதாவது:

திருப்பூா், ஈரோடு, கரூா் மாவட்ட விவசாயிகள் பவானிசாகா், அமராவதி அணை தண்ணீா் மற்றும் கிணறு நீா், ஆழ்குழாய் கிணறு நீா், ஓடை நீா் ஆகியவற்றை பயன்படுத்தி ஆண்டுதோறும் தங்களின் வேளாண் வயல்களில் கரும்பு சாகுபடி செய்து பயன் அடைந்து வருகின்றனா். இந்த நிலையில் திருப்பூா், ஈரோடு கரூா் மாவட்டங்களில் கரும்பு சாகுபடி பரப்பினை அதிகரிக்கவும், கரும்பு விவசாயிகளின் நலனை பாதுகாக்கும் வகையிலும் ஒவ்வொரு ஆண்டும் கரும்பு உற்பத்தி செய்து தமிழ்நாடு அரசின் சா்க்கரை ஆலைகளுக்கு டன் கணக்கில் கரும்புகளை வழங்கி வரும் விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் ஜனவரி மாதம் சிறப்பு ஊக்கத் தொகை வழங்கப்பட்டு வருகிறது.

இதன்படி தமிழ்நாடு அரசு கடந்த 2022- 2023-ம் ஆண்டு சா்க்கரை அரவை பருவத்திற்கு உரிய கரும்பு சிறப்பு ஊக்கத்தொகையாக கரும்பு சாகுபடி விவசாயிகளுக்கு டன் ஒன்றுக்கு ரூ.195 வழங்க தமிழ்நாடு அரசு கடந்த ஜனவரி மாதம் முதல் வாரத்தில் உத்தரவிட்டது. இதனை தொடா்ந்து ஈரோடு மாவட்ட கரும்பு விவசாயிகள் சுமாா் 3 ஆயிரத்து 908 பேருக்கு கரும்பு சிறப்பு ஊக்கத்தொகை டன் ஒன்றுக்கு ரூ.195 என்ற வீதம் மொத்தம் ரூ.8 கோடியே 92 லட்சத்து 46 ஆயிரம் ரூபாய் கடந்த ஜனவரி மாதம் தை பொங்கலுக்கு முன்பு கரும்பு விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக அனுப்பி வழங்கப்பட்டது.

ஆனால் திருப்பூா், கரூா் மாவட்டங்களை சோ்ந்த சுமாா் 3 ஆயிரத்து 875 கரும்பு விவசாயிகள் பயன்பெறும் வகையில் கரும்பு சிறப்பு ஊக்கத்தொகை மொத்தம் ரூ.6 கோடியே 42 லட்சத்து 74 ஆயிரம் கரும்பு விவசாயிகளின் வங்கி கணக்கிற்கு அனுப்பி தற்போது வரை வைக்கப்படவில்லை. இதனால் திருப்பூா், கரூா் மாவட்ட கரும்பு விவசாயிகள் மிகுந்த ஏமாற்றத்துடன் சிரமம் அடைந்து உள்ளனா்.

எனவே தமிழ்நாடு அரசு உடனடியாக திருப்பூா், கரூா் மாவட்ட கரும்பு விவசாயிகளுக்கு உரிய கரும்பு சிறப்பு ஊக்கத்தொகை டன் ஒன்றுக்கு ரூ.195 என்ற வீதத்தில் தாமதமின்றி உடனடியாக வழங்க உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com