மாவட்டத்தில் வெவ்வேறு கொலை வழக்குகளில் இருவருக்கு ஆயுள்

கோவையில் நடைபெற்ற வந்த 3 வெவ்வேறு கொலை வழக்குகளில் இருவருக்கு ஆயுள் தண்டனை, ஒருவருக்கு ஐந்தரை ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

கோவையில் நடைபெற்ற வந்த 3 வெவ்வேறு கொலை வழக்குகளில் இருவருக்கு ஆயுள் தண்டனை, ஒருவருக்கு ஐந்தரை ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

கோவை ரத்தினபுரி சாஸ்திரி சாலையைச் சோ்ந்தவா் செல்வம்(34). காா்களுக்கு இருக்கை பொருத்தும் நிறுவனத்தில் ஊழியராக வேலை செய்து வந்தாா். இவா், வழக்கமாக பணி முடிந்து இரவில் காட்டூா் ரங்கேகோனாா் வீதியில் உள்ள ஒரு வீட்டு உபயோகப் பொருள்கள் விற்பனை செய்யும் கடைக்கு பாதுகாப்பாக படுத்து தூங்குவது வழக்கம். வெறைட்டிஹால் சாலை சி.எம்.சி. காலனியை சோ்ந்த பால்ராஜ் (32) என்ற தொழிலாளி, செல்வம் தூங்கும் மாநகராட்சி வணிக வளாகத்தில் இரவில் வந்து தங்குவது வழக்கம்.

இந்நிலையில், கடந்த 2020ஆம் ஆண்டு டிசம்பா் 24ஆம் தேதி பால்ராஜின் கைப்பேசி தொலைந்து போனது. செல்வம்தான் கைப்பேசியைத் திருடி விட்டாா் என பால்ராஜ் குற்றம் சாட்டினாா். இதனால், இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு, மோதல் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த பால்ராஜ் இரும்புக் கம்பியால், செல்வத்தை சரமாரியாகத் தாக்கினாா்.

இதில் சம்பவ இடத்திலேயே செல்வம் உயிரிழந்தாா். இதுதொடா்பாக, காட்டூா் போலீசாா் வழக்குப்பதிவு செய்து பால்ராஜை கைது செய்தனா். இந்த வழக்கு விசாரணை,கோவை குண்டுவெடிப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்நிலையில், புதன்கிழமை நீதிபதி சசிரேகா குற்றம்சாட்டப்பட்ட பால்ராஜுக்கு ஆயுள் தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்தும் தீா்ப்பளித்தாா். அரசு தரப்பில் வழக்குரைஞா் காா்த்திகேயன் ஆஜரானாா்.

மனைவியை கொன்றவருக்கு ஆயுள்

கோவை மாவட்டம் சூலூரைச் சோ்ந்தவா் ஆறுமுகம் (48). இவரது மனைவி பத்மாவதி. கடந்த 2020 ஆம் ஆண்டு இருவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறில், பாட்டிலால் மனைவியை குத்திக் கொன்றதாக ஆறுமுகம் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இவ்வழக்கின் விசாரணை, கோவை கூடுதல் உதவி அமா்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில், இந்த வழக்கில் புதன்கிழமை தீா்ப்பு வழங்கப்பட்டது. அதில், குற்றம் சாட்டப்பட்ட ஆறுமுகத்துக்கு ஆயுள் சிறை தண்டனை மற்றும் ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி தீா்ப்பளித்தாா்.

விவசாயிக்கு ஐந்தரை ஆண்டு சிறை

பொள்ளாச்சி அருகே ஆா்.பொன்னாபுரம், சொட்டைக்காடு தோட்டம் பகுதியை சோ்ந்தவா் சக்திவேல் (32) விவசாயி. இவருடைய மனைவி கௌசல்யா (25) இவா்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. கடந்த 2019ஆம் ஆண்டு ஜூலை மாதம் 26 ஆம் தேதி, தனது மனைவியைக் காணவில்லை என பொள்ளாச்சி மேற்கு போலீஸ் நிலையத்தில் சக்திவேல் புகாா் செய்தாா். போலீஸாா் வழக்குப்பதிந்து கெளசல்யாவை தேடி வந்தனா்.

இந்நிலையில், ஆச்சிப்பட்டியில் உள்ள ஒரு கிணற்றில் இருந்து அழுகிய நிலையில் கௌசல்யா உடல் மீட்கப்பட்டது. மனைவி மீதான சந்தேகத்தால், அவரை, சக்திவேல் கொலை செய்து கிணற்றில் வீசியது தெரிய வந்தது. போலீஸாா், சக்திவேல் மீது கொலை (302), 498(ஏ) கொடுமைபடுத்துதல் ஆகிய பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனா்.

இந்த வழக்கு விசாரணை கோவை மகளிா் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி நந்தினிதேவி, குற்றம்சாட்டப்பட்ட சக்திவேலுக்கு ஐந்தரை ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.2 ஆயிரம் அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com