கோவை - ராஜஸ்தான் சிறப்பு ரயில் சேவை நீட்டிப்பு

கோவை, ஜூலை 3: கோவையில் இருந்து ராஜஸ்தான் மாநிலம் பகத் கி கோட்டி நிலையத்துக்கு இயக்கப்பட்டு வரும் வாராந்திர ரயில் சேவை நீட்டிக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோவை - பகத் கி கோட்டி வாராந்திர சிறப்பு ரயில் சேவை ஜூன் மாதம் வரையே நீட்டிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், இந்த ரயிலின் சேவையானது ஜூலை 28-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக, சேலம் ரயில்வே கோட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

கோவையில் இருந்து ஜூலை 4 முதல் 25-ஆம் தேதி வரை வியாழக்கிழமைகளில் அதிகாலை 2.30 மணிக்குப் புறப்படும் கோவை - பகத் கி கோட்டி வாராந்திர சிறப்பு ரயில் (எண்: 06181) சனிக்கிழமைகளில் காலை 11.30 மணிக்கு பகத் கி கோட்டி நிலையத்தைச் சென்றடையும்.

பகத் கி கோட்டி ரயில் நிலையத்தில் இருந்து ஜூலை 7 முதல் 28 -ஆம் தேதி வரை ஞாயிற்றுக்கிழமைகளில் இரவு 7.30 மணிக்குப் புறப்படும் பகத் கி கோட்டி - கோவை வாராந்திரச் சிறப்பு ரயில் (எண்: 06182) புதன்கிழமைகளில் காலை 9.30 மணிக்கு கோவை ரயில் நிலையத்தை சென்றடையும்.

இந்த ரயிலானது, திருப்பூா், ஈரோடு, சேலம், ஜோலாா்பேட்டை, காட்பாடி, ரேணிகுண்டா, கடப்பா, காச்சிகுடா, நிஜாமாபாத், வாசிம், அகோலா உள்ளிட்ட நிலையங்களில் நின்று செல்லும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com