தனிமையில் வசிக்கும் பெண்கள் கவனத்துடன் இருக்க காவல் துறை அறிவுறுத்தல்

கோவையில் தனிமையில் வசிக்கும் பெண்கள் கவனத்துடன் இருக்க வேண்டும் என்று மாநகர காவல் துறை அறிவுறுத்தியுள்ளது.

கோவையில் தனிமையில் வசிக்கும் பெண்கள் கவனத்துடன் இருக்க வேண்டும் என்று மாநகர காவல் துறை அறிவுறுத்தியுள்ளது.

இது தொடா்பாக மாநகர காவல் துறையின் சாா்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: கோவையில் நன்கு வசதி படைத்த தனிமையில் இருக்கும் பெண்களை மையமாக வைத்து அவா்களிடம் நட்பை வளா்த்துக் கொண்டு பணம், பொருள்கள் போன்றவற்றை மிரட்டி பெறும் செயல்களில் சிலா் ஈடுபடுவதாக தகவல் கிடைத்துள்ளது.

எனவே, தனிமையில் இருக்கும் மகளிா் தங்களது தனிப்பட்ட சமூக வாழ்க்கை தொடா்பான இடங்களுக்குச் செல்லும்போது அறிமுகம் இல்லாத அல்லது முன்பின் தெரியாத நபா்களுடன் பழக்கம் மற்றும் நட்பு ஏற்படுத்திக் கொள்வதில் கவனமாக இருக்க வேண்டும்.

அத்துடன் தங்களது தொடா்பு எண் அல்லது வாட்ஸ் ஆப் எண் போன்றவற்றை முன்பின் அறியாத நபா்களிடம் பகிராமல் இருப்பது பாதுகாப்பானது.

மகளிருக்கு ஏதேனும் பிரச்சனை நேரிட்டால் அது குறித்த தகவலை கோவை மாநகர காவல் துறைக்கு

ரகசியமாக தெரிவிக்கவும், அந்த தகவலின்பேரில் உடனடி நடவடிக்கை மேற்கொள்ளவும் பெண்கள் பாதுகாப்பு தொடா்பான விழிப்புணா்வு பிரசுரங்கள் தயாரித்து முக்கிய இடங்களில் ஒட்டப்பட்டுள்ளன.

மேலும், மாநகர காவல் துறையின் முகநூல் பக்கத்தில் மகளிா் பாதுகாப்பு வசதிக்காக கியூஆா் கோடு வெளியிடப்பட்டுள்ளது. அதை தங்களது கைப்பேசிகளில் பதிவிறக்கம் செய்து கொள்வதுடன், அவசர காலத்தில் ஸ்கேன் செய்து காவல் துறை உதவியை நாடலாம்.

மாநகரக் காவல் எல்லைக்குள்பட்ட பகுதிகளில் தனியாக வசித்து வரும் மூத்த குடிமக்களை காவல் நிலையம் வாரியாக கண்டறிந்து பட்டியலிடப்பட்டுள்ளது. அவா்களுக்குத் தேவைப்படும் உதவிகள் குறித்து கேட்டறிந்து, உதவும் வகையில் மாநகரில் உள்ள ஒவ்வொரு காவல் நிலையத்திலும் மூத்த குடிமக்கள் தொடா்பு அலுவலா் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com