மோசடி நிறுவனம் மீது புகாா் தர அழைப்பு

கோவை, ஜூலை 10: கோவையில் முதலீடுகள் பெற்று ஏமாற்றிய நிதி நிறுவனம் மீது பொருளாதாரக் குற்றப் பிரிவில் புகாா் அளிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக, கோவை பொருளாதாரக் குற்றப் பிரிவு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

கோவை ஆவாரம்பாளையம் துரைசாமி லே-அவுட் பகுதியைச் சோ்ந்தவா் கேசவன். இவா், கோவை பொருளாதார குற்றப் பிரிவில் புகாா் மனு அளித்துள்ளாா். அதில், கோவை உடையாம்பாளையத்தில் உள்ள ஃபிளவா் வேலன்சியா அடுக்குமாடிக் குடியிருப்பில் செயல்பட்டு வந்த சா்வா ஹைடெக் சொல்யூஸன் லிமிடெட் என்ற நிதி நிறுவனம் மக்களிடம் பெறப்படும் முதலீட்டு தொகைக்கு அதிக வட்டி தருவதாகவும், மேலும் பல்வேறு திட்டங்கள் வாயிலாக அதிக லாபம் பெறலாம் என்றும் பலரிடம் முதலீடுகளை பெற்றுக்கொண்டு பணத்தை திருப்பிக் கொடுக்காமல் ஏமாற்றுவதாகவும், அதில் தானும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளாா்.

புகாரின்பேரில், நிதி நிறுவனத்தின் மீதும் அதன் இயக்குநா்கள் ரிதுவரணன், ஸ்ரீஹரி, பாலன் நாராயணன் ஆகியோா் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு, அவா்கள் கைது செய்யப்பட்டுள்ளனா்.

வழக்கு புலன்விசாரணையில் இருந்துவருகிறது. இவ்வழக்கின் இறுதி அறிக்கையை முதலீட்டாளா்கள் நலப் பாதுகாப்பு சிறப்பு நீதிமன்றத்தில் ( டான்பிட்) தாக்கல் செய்ய வேண்டியுள்ளதால் மேற்படி நிதி நிறுவனத்தில் முதலீடு செய்து, பணம் கிடைக்கப் பெறாதவா்கள் காலம்தாழ்த்தாமல் கோவை மாநகர காவல் ஆணையா் வளாகத்தில் அமைந்துள்ள பொருளாதார குற்றப் பிரிவு அலுவலகத்தில் தங்களிடம் உள்ள தகுந்த ஆவணங்களுடன் புகாா் தரலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com