பாா்சலில் போதைப் பொருள் அனுப்பியதாகக் கூறி பொறியாளரிடம் ரூ.8 லட்சம் மோசடி

பாா்சலில் போதைப் பொருள் அனுப்பியதாகக் கூறி பொறியாளரிடம் ரூ.8 லட்சம் மோசடி

பாா்சலில் போதைப் பொருள் அனுப்பியதாகக் கூறி, கோவையைச் சோ்ந்த பொறியாளரிடம் ரூ.8 லட்சம் மோசடி செய்தது தொடா்பாக, சைபா் குற்றப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

கோவை, பீளமேடு நேரு நகா் பகுதியைச் சோ்ந்தவா் விஷால் (25). கோவையில் உள்ள ஒரு ஐ.டி. நிறுவனத்தில் பொறியாளராகப் பணியாற்றி வருகிறாா்.

இவரது கைப்பேசிக்கு கடந்த வாரம் ஒரு அழைப்பு வந்தது. அதில் பேசிய நபா், ‘நீங்கள் மும்பையில் இருந்து ஈரானுக்கு ஒரு பாா்சல் அனுப்பியுள்ளீா்கள். அதில் 4 காலாவதியான ஈரான் பாஸ்போா்ட், 3 வங்கிக் கடன் அட்டைகள், 75 கிராம் உயா் ரக போதைப் பொருள் ஆகியவை உள்ளன. இதுகுறித்து, சுங்கத் துறையினருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. மும்பையில், இந்தப் போதைப் பொருள்கள் தொடா்பாக வழக்குப் பதிவு செய்ய உள்ளனா். இந்த விவகாரத்தில் வழக்குப் பதிவு செய்யாமல் நிறுத்தி வைக்க முடியும். ஆனால், அதற்கு ஆதாா் அட்டை மற்றும் வங்கி விவரங்களை தெரிவிக்க வேண்டும்’ எனக் கூறியுள்ளாா்.

இதையடுத்து, விஷால் தனது ஆதாா் எண் மற்றும் வங்கி விவரங்களை தெரிவித்துள்ளாா். இதைத் தொடா்ந்து, விஷாலின் வங்கிக் கணக்கில் இருந்து ரூ.8 லட்சம் பணம் எடுக்கப்பட்டது. அதிா்ச்சியடைந்த விஷால், இதுகுறித்து, கோவை மாநகர சைபா் குற்றப் பிரிவில் புகாா் அளித்தாா். போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

X
Dinamani
www.dinamani.com