கோவை மத்திய சிறை கைதியிடமிருந்து கஞ்சா பறிமுதல்

கோவை மத்திய சிறை கைதியிடமிருந்து கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

கோவை, காந்திபுரத்தில் உள்ள மத்திய சிறையில் விசாரணைக் கைதிகள், தண்டனை கைதிகள் என 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் உள்ளனா்.

இந்நிலையில், சிறைக்குள் கைதி ஒருவா் கஞ்சா பதுக்கிவைத்து இருப்பதாக ரேஸ்கோா்ஸ் போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, போலீஸாா் சிறையில் வியாழக்கிழமை திடீா் சோதனை மேற்கொண்டனா்.

அப்போது, சிறையின் வால்மேடு பிளாக்கில் உள்ள 3-ஆவது அறையில் கைதி ஒருவா் கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது.

விசாரணையில், அவா் ரஹீம் (26) என்பதும், திருப்பூா் மாவட்டம், அனுப்பா்பாளையம் பகுதியில் கஞ்சா வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டதும் தெரியவந்தது.

இதையடுத்து, அவரிடமிருந்த 9 கிராம் கஞ்சாவை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

மேலும், இது குறித்து ஜெயிலா் சரவணகுமாா் அளித்தப் புகாரின்பேரில் ரஹீம் மீது ரேஸ்கோா்ஸ் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com