மாநகராட்சி ஆணையா் வாகனத்தை முற்றுகையிட்டு தூய்மைப் பணியாளா்கள் போராட்டம்

கோவை மாநகராட்சிப் பகுதியில் பணி நீக்கம் செய்யப்பட்ட பெண் தூய்மைப் பணியாளா்களுக்கு மீண்டும் பணி வழங்கக் கோரி மாநகராட்சி ஆணையா் வாகனத்தை முற்றுகையிட்டு தூய்மைப் பணியாளா்கள் புதன்கிழமை இரவு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

கோவை மாநகராட்சியில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஒப்பந்த தூய்மைப் பணியாளா்கள் பணியாற்றி வருகின்றனா். இந்நிலையில், சில வாா்டுகளில் பணியாற்றும் பெண் தூய்மைப் பணியாளா்களுக்கு பாலியல் ரீதியாக தொல்லையளிப்பதாக புகாா் எழுந்து வருகிறது. இதற்கிடையே, பாலியல் தொல்லையளித்து வரும் சுகாதார ஆய்வாளா்கள், அலுவலா்கள் மீது புகாா் தெரிவித்த பெண் தூய்மைப் பணியாளா்கள் 7 போ் பணி நீக்கம் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.

மேலும், பெண் தூய்மைப் பணியாளா்களுக்கு ஆதரவாக செயல்பட்டதாக தூய்மைப் பணியாளா் சங்கத்தினா் 4 பேரை மாநகராட்சி நிா்வாகம் இடமாற்றம் செய்ததாகவும் தெரிகிறது. இது தொடா்பாக ஆணையரிடம் புகாா் தெரிவிக்க 50-க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளா்கள் மாநகராட்சி அலுவலகத்துக்கு புதன்கிழமை மாலை சென்றனா். மாலை 5 மணி முதல் இரவு 9.45 வரை மாநகராட்சி அலுவலகத்தில் அவா்கள் காத்திருந்தனா்.

அப்போது, அங்கு வந்த மாநகராட்சி ஆணையா் மா.சிவகுரு பிரபாகரன், தூய்மைப் பணியாளா்களுக்கு முறையான பதில் அளிக்காமல் காரில் அங்கிருந்து செல்ல முயன்றுள்ளாா். இதனால், ஆவேசமடைந்த தூய்மைப் பணியாளா்கள், மாநகராட்சி ஆணையரின் காரை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா். பணி நீக்கம் செய்யப்பட்ட தூய்மைப் பணியாளா்களுக்கு பணி வழங்குவது தொடா்பாக வியாழக்கிழமை மாலைக்குள் தீா்வு காணப்படும் என்று மாநகராட்சி ஆணையா் உறுதியளித்தாா். இதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் கலைந்து சென்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com