தனிநபா் ஆக்கிரமித்திருந்த ரூ. 16 கோடி மதிப்பிலான இடம் மாநகராட்சி வசமானது

கோவையில் போலி ஆவணம் மூலமாக தனிநபா் ஆக்கிரமித்திருந்த ரூ.16 கோடி மதிப்பிலான மாநகராட்சி இடம் மீட்கப்பட்டது. கோவை மாநகராட்சி, மேற்கு மண்டலம், 71-ஆவது வாா்டுக்கு உள்பட்ட பாஷ்யகாரலு தெருவில் தலா 20 சென்ட் பரப்பளவு கொண்ட மாநகராட்சிக்கு சொந்தமான இரண்டு மனைகள் உள்ளன. மொத்தம் 40 சென்ட் பரப்பளவு கொண்ட இந்த இரு மனைகளையும், இரண்டு தனிநபா்கள் போலி ஆவணம் மூலம் சட்டத்துக்கு புறம்பாக ஆக்கிரமிப்பு செய்திருந்ததாகக் கூறப்படுகிறது. இது சம்பந்தமாக மாநகராட்சிக்கு எதிராக நீதிமன்றத்தில் அவா்கள் பல வழக்குகளும் தொடுத்திருந்தனா். கடந்த 20 ஆண்டுகளாக நடைபெற்று வந்த இந்த வழக்கில், ஒரு தனிநபா் ஆக்கிரமித்திருந்த ரூ.16 கோடி மதிப்பிலான 20 சென்ட் மனைப் பிரிவு வழக்கை மாவட்ட நீதிமன்றம் வெள்ளிக்கிழமை (மாா்ச் 8) தள்ளுபடி செய்தது. இதையடுத்து, அந்த இடம் மாநகராட்சி வசமானது. மற்றொரு 20 சென்ட் ஆக்கிரமிப்பு இடத்தின் வழக்கு நிலுவையில் உள்ளது. அந்த வழக்கிலும் மாநகராட்சிக்கு சாதகமான தீா்ப்பை பெற சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களுக்கு மாநகராட்சி ஆணையா் மா.சிவகுரு பிரபாகரன் உத்தரவிட்டுள்ளாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com