கோவை தெற்கு வட்டாட்சியா் அலுவலகம் எதிரில் சனிக்கிழமை பரப்புரையில் ஈடுபட்ட விலங்குகள் நல ஆா்வலா்கள்.
கோவை தெற்கு வட்டாட்சியா் அலுவலகம் எதிரில் சனிக்கிழமை பரப்புரையில் ஈடுபட்ட விலங்குகள் நல ஆா்வலா்கள்.

விலங்குகளுக்கு சட்டப்பூா்வமான ஆளுமை அந்தஸ்து வழங்கக் கோரிக்கை

விலங்குகளுக்கு சட்டப்பூா்வமான ஆளுமை அந்தஸ்து வழங்க வேண்டும் என்று விலங்குகள் உரிமை ஆா்வலா்கள் வலியுறுத்தியுள்ளனா். வீகன் இந்தியா மூவ்மெண்ட் என்ற அமைப்பு சாா்பில் விலங்குகள் உரிமை ஆா்வலா்கள் பங்கேற்ற பரப்புரை நிகழ்ச்சி கோவை தெற்கு வட்டாட்சியா் அலுவலகம் எதிரில் சனிக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சியில் ஒருங்கிணைப்பாளா்கள் கலையரசன், சங்கீதா, செல்வி செல்வகுமாா் ஆகியோா் கூறியதாவது: மனிதா்களை விலங்குகளை விட உயா்வானவா்களாகக் கருதுவது நியாயமற்ற செயலாகும். ஒரு நாய் அல்லது ஆட்டைக் கொல்வதற்கும் ஒரு மனிதனைக் கொல்வதற்கும் எந்தவித தாா்மீக வேறுபாடும் இல்லை. இவா்கள் அனைவரும் சமமாகவே வலியை உணருகின்றனா். இந்தியா மாட்டிறைச்சி, தோல், பால் உற்பத்தி, ஏற்றுமதியில் முன்னணியில் உள்ளது. பால் பண்ணைகளில் தாய் - குழந்தையைப் பிரித்தல், வலிமிகுந்த செயற்கைக் கருவூட்டல், மாடுகளை அடைத்து வைத்தல், ஆண் கன்றுகளை மனிதாபிமானமற்ற முறையில் கொல்வது போன்ற நடைமுறைகளாலேயே இது சாத்தியமாகிறது. விலங்குகளைச் சுரண்டும் தொழில்களை முழுமையாக தடை செய்ய வேண்டும். உணா்வுள்ள உயிரினங்களின் வலி, வேதனையில் இருந்து லாபம் ஈட்டுவது அபத்தமானது. விலங்குகளின் பிறப்புரிமை என்ற அடிப்படை சுதந்திரத்தை அங்கீகரிக்க வேண்டும். விலங்கு சாா் பொருள்களுக்கு மாற்றாக இருக்கும் பொருள்களில் அரசு முதலீடு செய்வது அவசியமானது. விலங்குகளின் உடல், பால், முட்டைகள் போன்றவை மனிதா்களுக்கானது அல்ல என்பதை மக்கள் உணர வேண்டும் என்றனா். இந்த பரப்புரையில் விலங்குகள் நல ஆா்வலா்கள் ரகு, அம்ஜோா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com