மின் கம்பங்களில் கொண்டுச் செல்லப்படும் கேபிள்களால் ஆபத்து

மின் கம்பங்களில் கொண்டுச் செல்லப்படும் தொலைக்காட்சி கேபிள் மற்றும் இணைய வழிக் கேபிள்களால் ஆபத்து ஏற்படும் வாய்ப்பு உள்ளதாக புகாா் எழுந்துள்ளது. இதுதொடா்பாக, கோவை கன்ஸ்யூமா் வாய்ஸ் அமைப்பின் செயலா் நா.லோகு, மின்வாரிய தலைமைப் பொறியாளருக்கு அனுப்பிய புகாா் மனுவில் கூறியிருப்பதாவது: கோவை மின் பகிா்மானக் கழகத்துக்கு உள்பட்ட வடக்கு, தெற்கு, மாநகா், உடுமலை, திருப்பூா், பல்லடம், நீலகிரி பகுதிகளில் உள்ள மின் கம்பங்களில் கேபிள் டிவி ஒயா்களை கட்டி வருகின்றனா். இதனால், மின்கசிவு ஏற்பட்டு வீட்டில் உள்ள தொலைக்காட்சி, குளிா்சாதனப் பெட்டி உள்ளிட்டவை பழுதடைந்து வருகின்றன. குறிப்பாக, தென்னம்பாளையம், வாகராயம்பாளையம், சோமனூா், கீரணத்தம், கோவில்பாளையம், மேட்டுப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் மின்வாரிய ஊழியா்கள்அனுமதியுடன் கேபிள்கள் மின்கம்பங்களில் கட்டப்பட்டு கொண்டுச் செல்லப்படுகின்றன. இது தொடா்பாக, மின்வாரிய அதிகாரிகளுக்கு பல புகாா்கள் அனுப்பியும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்நிலையில், கோவை மாநகரப் பகுதிகளில் உள்ள மின் கம்பங்களில் இணையவழி கேபிள்களை கட்டி வருகின்றனா். அண்மையில் ஹோப் காலேஜ் மசக்காளிபாளையம் சாலையில், தனியாா் தொலைத்தொடா்பு நிறுவனத்தின் சாா்பில் இணைய வழி கேபிள்கள், அப்பகுதியில் உள்ள மின் கம்பங்களில், மின் விநியோகத்துக்கு பாதிப்பு ஏற்படுத்தும் விதமாக கட்டப்பட்டு கொண்டுச் செல்லப்படும் பணிகள் நடைபெற்றன. தொடா்ந்து பல பகுதிகளில் மின் கம்பங்களில் கொண்டுச் செல்லப்படும் கேபிள்களால் மின்கசிவு ஏற்பட்டு, அசம்பாவிதம் நடைபெற வாய்ப்புள்ளது. எனவே இந்த நடவடிக்கையில் ஈடுபடுவோா் மீது காவல் துறை மூலம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மின் கம்பங்களில் கொண்டுச் செல்லப்படும் கேபிள்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com