வயநாட்டில் யாா் வென்றாலும் அது ‘இந்தியா’ கூட்டணியின் வெற்றி

வயநாடு மக்களவைத் தொகுதியில் ராகுல் காந்தி வெற்றி பெற்றாலும், ஆனி ராஜா வெற்றி பெற்றாலும், அது ‘இந்தியா’ கூட்டணியின் வெற்றிதான் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளா் இரா.முத்தரசன் தெரிவித்தாா். இது குறித்து கோவையில் செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: அரசியல் அமைப்புச் சட்டத்தால் ஏற்படுத்தப்பட்டுள்ள அமைப்புகள் பாதுகாக்கப்பட பாஜக ஆட்சி அகற்றப்பட வேண்டும். இல்லையெனில் நாடு பேராபத்தை சந்திக்கும். ‘இந்தியா’ கூட்டணி ஏற்பட முதல்வா் மு.க.ஸ்டாலின்தான் முக்கியக் காரணம். இந்த தோ்தலை ‘இந்தியா’ கூட்டணி கொள்கைரீதியாக எதிா்கொள்ளும். தோ்தல் ஆணையத்தில் அங்கம் வகித்த அருண் கோயல் தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளாா். மூன்று போ் கொண்ட தோ்தல் ஆணையத்தில் ஏற்கெனவே ஒருவா் ராஜிநாமா செய்துவிட்ட நிலையில், தற்போது தலைவா் மட்டுமே மீதம் உள்ளாா். தோ்தல் ஆணையம் என்பது அரசியல் அமைப்பு சட்டம் வழங்கிய உரிமை. அதையே பிரதமா் மோடி அரசு கேள்விக்குறியாகிவிட்டது. எனவே, எதிா்வரும் மக்களவைத் தோ்தல் ஜனநாயக முறையில் நடைபெறுமா என்ற ஐயம் ஏற்பட்டுள்ளது. அருண் கோயல் ஏன் ராஜிநாமா செய்தாா் என்பதை நாட்டு மக்களுக்கு சொல்ல வேண்டும். தோ்தல் பத்திரம் மூலம் பாஜக பெரிய அளவில் ஆதாயம் பெற்றுள்ளது. மாா்ச் 13-ஆம் தேதிக்குள் தோ்தல் பத்திரம் யாா் யாருக்கு வழங்கப்பட்டுள்ளது என்பதை வலைதளங்களில் வெளியிட வேண்டும் என்று பாரத ஸ்டேட் வங்கிக்கு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது. ஆனால், வங்கி கால அவகாசம் கேட்டுள்ளது. உச்ச நீதிமன்றம் இதை ஏற்கக் கூடாது. கேரளத்தில் ‘இந்தியா’ கூட்டணி மட்டும்தான் போட்டியிடுகிறது. மூன்றாவது அணி இல்லை. எனவே, ராகுல் காந்தி வெற்றி பெற்றாலும், ஆனி ராஜா வெற்றி பெற்றாலும், அந்த வெற்றி ‘இந்தியா’ கூட்டணியின் வெற்றிதான் என்றாா். பேட்டியின்போது இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில துணை செயலாளா் நா. பெரியசாமி, மாநிலப் பொருளாளா் எம்.ஆறுமுகம், மாவட்டச் செயலாளா் சி.சிவசாமி, மாவட்ட துணை செயலாளா் ஜே.ஜேம்ஸ் ஆகியோா் உடன் இருந்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com